வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (10/08/2018)

கடைசி தொடர்பு:21:00 (10/08/2018)

நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும் மத்திய அரசு!

சுகாதாரத் துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தும் முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பரிசீலிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேர்வு

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த இருப்பதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்தும் என்றும், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை ஆட்சேபம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு, சுகாதாரத் துறை சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதால், மாணவர்களுக்கு சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கணினி வழியாக நடத்தப்படும் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயமும் இருப்பதாகவும் சுகாதாரத் துறை கவலை தெரிவித்திருக்கிறது. இதனால், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தும் முடிவை மறுபரிசீலனைசெய்ய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.