செயல்படாத சிக்னல்கள்! - மயிலாடுதுறை வாகன ஓட்டிகள் அவதி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர அமைத்திருக்கும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இயங்காததால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சிக்னல்கள்

தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி, நாகை ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக விளங்குகிறது மயிலாடுதுறை நகராட்சி. மேற்குறிப்பிட்ட நகரங்களில் இருந்து ஒன்றரை மணி நேர பயணத்தொலைவில் அமைந்துள்ளது மயிலாடுதுறை. ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், வெளியூர்களில் இருந்து ஆன்மிக சுற்றுலா வரும் பக்தர்கள் என தினமும் பல்லாயிரகணக்கானோர் கடந்து செல்லும் இந்த மயிலாடுதுறைப் பகுதி, குறுகிய சாலைகளால் போக்குவரத்து நெரிசலாகக் காணப்படுகிறது.

நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனை திரும்பும் சாலை, கிட்டப்பா அங்காடி, கண்ணாரத்தெரு முக்கூட்டு, கால்டாக்ஸ் என நகரின் நான்கு முக்கியப் பகுதிகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், மேற்படி அனைத்து இடங்களிலும் உள்ள சிக்னல்களும் தற்போது இயங்காமல் உள்ளன. கிட்டப்பா அங்காடி முன் உள்ள ஒலிபெருக்கி வசதியுடன்கூடிய காவல் உதவி மையமும் சில மாதங்களாக செயல்படாமல் உள்ளது. நகரின் அனைத்து சிக்னல் விளக்குகளும் முற்றிலும் சேதமடைந்து செயல்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பொதுமக்கள் தினமும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

வெளியூர்களில் இருந்து வந்துசெல்லும் கனரக வாகனங்கள், மயிலாடுதுறை பேருந்து நிலையம் வழியாகக் கடந்துசெல்வதால், அப்பகுதியில், பள்ளி நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. ``காலை, மாலை இரு வேலைகளிலும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பழுதடைந்துள்ள சிக்னல் விளக்குகளைச் சீரமைத்து, போக்குவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர, நகர எல்லைக்குள் வரும் வெளியூர் பேருந்துகள், வேகத்தைக் குறைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!