நீதிமன்றம் விடுதலைசெய்த பின்பும் திருமுருகன் காந்தி மீண்டும் கைது!

திருமுருகன் காந்தி

போலீஸ் கேட்டுக்கொண்டபடி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்ட பின்னர், அவரை சென்னை மாநகர போலீஸார் மீண்டும் கைதுசெய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐரோப்பாவுக்குச் சென்றுவந்த திருமுருகன் காந்தியை லுக் அவுட் நோட்டீஸ் எனப்படும் விமானநிலையங்களில் தேடுதல் அறிவிக்கை தந்து, பெங்களூரு விமானநிலையத்தில் நேற்று அதிகாலை தடுத்துவைத்தனர். பின்னர் சென்னையிலிருந்து சென்ற சைபர் கிரைம் போலீஸ் பிரிவினர் அவரைக் கைதுசெய்து, இன்று காலை 8 மணி அளவில் சென்னைக்குக் கூட்டிவந்தனர். 

எழும்பூர் நீதிமன்றப் பகுதியிலுள்ள நீதிபதிகள் குடியிருப்பில் அவரை வைத்திருந்த போலீஸார், உரிய தகவல் தராமல் அலைக்கழிப்பதாக மே பதினேழு இயக்கத்தினர் கூறினர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதித்துறை 17-வது நடுவர்மன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அவர் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவுசெய்த போலீஸார், தேசத்துரோக வழக்கிலும் சேர்த்திருந்தனர். அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்கமறுத்த நடுவர் பிரகாஷ், திருமுருகன் காந்தியைச் சிறையிலடைக்க உத்தரவிடமுடியாது என்றும் அவரிடம் 24 மணி நேரம் விசாரணை நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தார். 

அதன்பேரில் பழைய மாநகர போலீஸ் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரிக்கப்பட்ட அவர், 6.50 மணியளவில் வெளியில் வந்தார். மே பதினேழு இயக்கத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென வந்த போலீஸார் அவரைக் கைது செய்ய முயன்றனர். கைது ஆணை இருக்கிறதா என திருமுருகனும் அவருடைய அமைப்பினரும் போலீஸாரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோதே, சில போலீஸார் அலேக்காகத் தூக்கிச்சென்று வேனில் போட்டனர். என்ன ஏதென அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள், அது நடந்துமுடிந்தது; உடனிருந்த வழக்குரைஞர்கள் விசாரித்ததற்குகூட முறையான பதில் தரவில்லை. 

போலீஸ் வேனைப் பின் தொடர்ந்து சென்ற மே பதினேழு இயக்கத்தினர் மற்றும் பிற அமைப்பினர், ராயப்பேட்டைக்கு அவர் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்தனர். ராயப்பேட்டை போலீஸ்நிலையத்தில் திருமுருகன் காந்தி வைக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டது சட்டவிரோதம் என தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், ராயப்பேட்டை பெரியார் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பேசினார். அது தொடர்பாக அப்போது ஒரு வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!