இந்திய உணவு பதனத் தொழில்நுட்பக் கழகத்தின் பொன் விழா ஆண்டுக் கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர்கள்

தஞ்சாவூரில் செயல்பட்டுவரும் இந்திய உணவு பதனத் தொழில்நுட்பக் கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைப் பொன் விழா ஆண்டு விழாவாக  வரும் 17-ம்  தேதி கொண்டாட உள்ளனர். இந்த நிறுவனத்தால் உருவாக்கபட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் மற்றும் விவசாயப் பொருள்கள் உற்பத்தியாளர்களுடன் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளோடு நடைபெற உள்ள இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

தஞ்சையில் செயல்பட்டுவரும் இந்திய உணவு பதனத் தொழில்நுட்பக் கழகம், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். உணவு பதப்படுத்துதல் துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் இந்த நிறுவனம், விவசாயிகள்,தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகளையும் வழங்கிவருகிறது. 1967-ம் ஆண்டு, சுவாமிநாதன் என்பவரால்  தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைப் பொன் விழா ஆண்டாகக் கொண்டாடப்பட இருக்கிறது. வரும் 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறும் இதன் தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகிய இருவரும் கலந்துகொள்கின்றனர்.

இதுகுறித்து இந்திய உணவு பதனத் தொழில்நுட்பக் கழக இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்  பேசியாதாவது, ``வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை  பொன் விழா ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இது வெறும் விழாவாக மட்டும் இல்லாமல், தொழில் முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நல்ல வழிகாட்டுதலாக அமையும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதில், இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் மற்றும் விவசாயப் பொருள்கள் உற்பத்தியாளர்களுடன் பரிமாறிக்கொள்ளுதல், கருத்தரங்கம், கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மேலும், நீரா விவசாயிகளுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்பட உள்ளன. அத்துடன், தேங்காயில் புதிய உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளையும் வெளியிட இருக்கிறோம். இதில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்தும் உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்’’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!