வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/08/2018)

கடைசி தொடர்பு:23:30 (10/08/2018)

காவல்நிலைய எல்லை பிரச்னை: கோவையில் 7 மணி நேரம் மரத்தில் தொங்கிய சடலம்..!

கோவையில், காவல்நிலைய எல்லை பிரச்னையால் 7 மணி நேரத்துக்கும் மேலாக மரத்தில் ஓர் ஆண் சடலம் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில், காவல்நிலைய எல்லை பிரச்னையால் 7 மணி நேரத்துக்கும் மேலாக மரத்தில் ஓர் ஆண் சடலம் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலம்

கோவை, நீலம்பூர் பைபாஸ் சாலையின் அருகே உள்ள குளத்தூர் - இருகூர் சாலையில் உள்ள ஒரு மயானம் இருக்கிறது. அதன் வெளிப்புறத்தில் உள்ள ஒரு மரத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கு மாட்டி இறந்துள்ளார். இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த சூலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள், "இது எங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதி இல்லை" என்று கூறி திரும்பிச் சென்றுவிட்டனர். அதேபோல், சிங்காநல்லூர் போலீஸாரும், "இதுஎங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதி இல்லை" எனக் கூறி சடலத்தை எடுக்க மறுத்துவிட்டனர். இதில், சூலூர் காவல் நிலையம் கோவை மாவட்டக் காவல்துறைக்கும் சிங்காநல்லூர் காவல் நிலையம் கோவை மாநகர காவலுக்கும் உட்பட்டது. இது மாவட்ட போலீஸ் எல்லையா, மாநகர போலீஸ் எல்லையா என்று எல்லை சிக்கல் ஏற்பட்டது. இதனால், அந்தச் சடலம் சுமார் ஏழு மணி நேரத்துக்கும் மேலாக மரத்தில் தொங்கியபடி இருந்தது.

பின்னர் கிராம நிர்வாக அலுவலர், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து துரிதப்படுத்தியதால், இரவு 7 மணி அளவில் சூலூர் போலீஸார், அந்தச் சடலத்தை எடுத்து, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.