முறைகேடு குற்றச்சாட்டு எதிரொலி - பதிவாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த துணைவேந்தர் சூரப்பா!  | Anna University registrar Ganesan was suspended after answer paper Scam

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (11/08/2018)

கடைசி தொடர்பு:00:00 (11/08/2018)

முறைகேடு குற்றச்சாட்டு எதிரொலி - பதிவாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த துணைவேந்தர் சூரப்பா! 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த கணேசனை அதிரடியாக நீக்கியுள்ளார், துணைவேந்தர் சூரப்பா. 

பதிவாளர் கணேசன்

வினாத்தாள் மறுமதிப்பீடு சர்ச்சை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில், அதிக அளவு மாணவர்கள் தேர்ச்சிபெறாமல் இருந்தனர். இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். இதில், சுமார் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மறுமதிப்பீட்டில் தேர்ச்சிபெற்றனர். இந்த 73 ஆயிரம் பேரில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றனர். இந்நிலையில், இந்த மறுமதிப்பீட்டில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்குவதற்காக, மாணவர்களிடமிருந்து ரூபாய் 10,000 வீதம் வாங்கியதாக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உட்பட, சிலர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து புகார் எழுந்தவண்ணம் இருக்க, கடந்த 2-ம் தேதி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. 

தொடர்ந்து, அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில்தான், மறுமதிப்பீடு விவகாரத்தில் உமாவுக்கு மட்டுமல்லாமல் பதிவாளர் கணேசனுக்கும் தொடர்பு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு பகிரங்கக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததுடன், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்குக் கடிதம் எழுதினர். இந்தக் கடித்ததால், இவ்விவகாரத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதற்கிடையே, குற்றச்சாட்டுக்கு ஆளான பதிவாளர் கணேசனை அதிரடியாக நீக்கியுள்ளார், துணைவேந்தர் சூரப்பா. அவருக்குப் பதிலாக பொறுப்பு பதிவாளராக ஜெ.குமார் என்பவரை நியமனம்செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க