அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் மர்மம்..! ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டத்தில் அங்கன்வாடி மையப் பொறுப்பாளர்கள் காலிப்பணியிட பட்டியல் பூர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர் இறுதிப்பட்டியலைக் கொடுத்தபின்பும் பட்டியல் வெளியிடாமல் இருப்பதில் மர்மம் நீடிப்பதாக  மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் வாசுகி கூறும்போது, 'சிவகங்கை மாவட்டத்தில் 1,552 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் இதுவரை 855 உள்ளது. 800 காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் கடந்த 6.9.2017-ல் நடைபெற்று ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில் இதுவரை காலிப்பணியிடங்கள் நிரப்பபடவில்லை. இதுகுறித்து எங்களது சங்கம் சார்பாக 5 முறை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பேசியுள்ளோம். இரண்டு முறை சாவி ஒப்படைப்பு போராட்டம் நடத்தியதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, கால அவகாசம் கோரினர். கடந்த 1.8.2018 அன்று மாவட்ட ஆட்சியரை சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசும் போது, 'தகுதி வாய்ந்தோர் பட்டியலை இறுதி செய்து, மாவட்ட திட்ட அலுவலரிடம் ஒப்படைத்து விட்டதாகவும், தனது தரப்பு வேலைகள் அனைத்தும் முடித்து விட்டதாகவும் ஆட்சியர் கூறினார். இது கு‌றி‌த்து மாவட்டத் திட்ட அலுவலரை அணுகிய போது சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலர் பட்டியல் வெளியிடுவதற்கான ஒப்புதலை அளிக்கவில்லை என்று சொல்லுகிறார். ஆனால் தேனி மாவட்டத்தில் கடந்த 2.8.2018 அன்று பணியிடங்கள் மாவட்ட ஆட்சியரால் நிரப்பப்பட்டு விட்டது. அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு பணியாளரும் கூடுதலாக ஒரு மையமும், சிலர் 2, 3 மையங்களுக்கு இன்சார்ஜாக உள்ளனர். உதவியாளர் இல்லாத இரண்டு மையங்களுக்கு ஒரு பணியாளர் இன்சார்ஜ் பார்க்கிறார்கள். ஒரு மையத்திற்கும் மற்றொரு மையத்துக்கும் 7 கி.மீ, முதல் 10 கி.மீ தூரம் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பிற துறை அதிகாரிகளும், பல்வேறு பணிகளை, அங்கன்வாடி பணியாளர்கள் மீது திணிக்கின்றனர். அதனால் ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்பிடக் கோரி வருகிற 13.8.2018 திங்கட்கிழமை அன்று எங்களது சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் "நீதி கேட்கும் முறையீடு நடத்த உள்ளோம்  என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!