வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (11/08/2018)

கடைசி தொடர்பு:12:35 (11/08/2018)

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்

ஆடி அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நாடு முழுவதும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நாடு முழுவதிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்

இந்துக்கள் மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் விரதம் இருந்து தங்களின் முன்னோர்கள் நினைவாக வழிபாடு நடத்துவர். இவற்றில் ஆடி, தை, மாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பானதாகும். இந்தத் தினங்களில் குளங்கள், ஆறுகள், நதிகள், கடல்களில் புனித நீராடி தங்கள் முன்னோர்கள் நினைவாகச் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி வழிபடுவர். 

அதன்படி ஆடி அமாவாசை தினமான இன்று நாடு முழுவதிலுமிருந்து ராமேஸ்வரம் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், காலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். இதன்பின், கடற்கரையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தின் நலனுக்காகச் சங்கல்ப பூஜையும் அதைத் தொடர்ந்து  தங்கள் முன்னோர்கள் நினைவாகத் தர்ப்பணம் செய்தும் வழிபாடு செய்தனர். அதன் பின், ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர். அதைத் தொடர்ந்து ஸ்ரீராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளைத் தரிசித்து அமாவாசை விரதத்தை முடித்தனர்.

ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை

இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு தங்கக் கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளும் அருள்மிகு ராமர், பக்தர்களுக்குத் தீர்த்தவாரி வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. முன்னதாக அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கு வீதி உலா நடந்தது. ஆடி அமாவாசை தினமான இன்று ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், கோயிலில் தீர்த்தமாடவும், சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கோயிலின் 4 ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அமாவாசை தினத்தை முன்னிட்டு கோயில் இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ஸ்படிகலிங்க பூஜையும்  நடந்தது. 

 கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளைத் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, மேலாளர் கஹாரின், உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, கண்ணன், கலைச்செல்வன் உள்ளிட்ட திருக்கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். ராமேஸ்வரத்துக்கு வருகை தந்த பக்தர்களின் பாதுகாப்புக்காக, நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அமாவாசையை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளை நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.