வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (11/08/2018)

கடைசி தொடர்பு:13:09 (17/08/2018)

காற்றின் வேகத்தால் எல்லை தாண்டிய நாட்டுப்படகு மீனவர்கள்! - சிறைபிடித்த இலங்கை கடற்படை

 ராமநாதபுரம் மற்றும் புதுகை, தஞ்சை மாவட்டங்களிலிருந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 27 பேரை நேற்று நள்ளிரவு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகுகள் 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்புதாளை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், லோகமுத்து, பாலா, முத்துமாரி, ராக்கு, அபுதாஹீர் உள்ளிட்ட 22 மீனவர்கள் 3 நாட்டுப்படகுகளில் புதுக்கோட்டை மாவட்டம் சென்பக மகாதேவன்பட்டினம் கடற்கரையிலிருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதே போல் மல்லிபட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஒரு நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் நேற்று நள்ளிரவு இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென வீசிய பலத்த காற்றால் மீனவர்களின் கட்டுப்பாட்டை இழந்த நாட்டுப்படகுகள் இலங்கைக் கடல் பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்த தமிழக நாட்டுப்படகுகள் நான்கையும், அதில் இருந்த மீனவர்கள் 27 பேரையும் சிறை பிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமுக்கு விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

வழக்கமாக விசைப்படகு மீனவர்களைத் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடிப்பதாகக் கூறி சிறைபிடித்துச் செல்லப்படும் இலங்கைக் கடற்படையினர் தற்போது நாட்டுப்படகு மீனவர்களை சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இதனால் ராமநாதபுரம் நாகை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.