`அது மேலிட உத்தரவு' - திருமுருகன் காந்தி விவகாரத்தில் அவசரம் காட்டிய போலீஸ் 

திருமுருகன் காந்தி


 மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விவகாரத்தில் தமிழக போலீஸாரை நீதிமன்றம் எச்சரித்தபோதிலும் அடுத்த வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
 
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை சென்னைக்கு அழைத்துவந்தனர். பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீஸார் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களைத் திருமுருகன் காந்தி மறுத்தார். அதோடு ஜ.நா சபை வெளியிட்ட வீடியோவுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று வாதிட்டார். அந்த வீடியோவை நான் வெளியிடவில்லை. வெளியிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்குப் போலீஸார் தரப்பில் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. 
 
தொடர்ந்து நீதிபதி பிரகாஷ், திருமுருகன் காந்தியை நீதிமன்றக் காவலில் அனுப்ப முடியாது என்று அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் மீண்டும் திருமுருகன் காந்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தற்போது 2017-ம் ஆண்டு போடப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜெனீவாவுக்குச் சென்ற திருமுருகன் காந்தி, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார். இதனால்தான் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம். அவரைக் கைதுசெய்வது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட்  நோட்டீஸ் கொடுத்தோம். அதன்படி பெங்களுரு விமான நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள், ஜூன் மாதத்தில் போடப்பட்ட வழக்கில் உள்நோக்கத்தோடு திருமுருகன் காந்தியைக் கைது செய்திருப்பதாகவும், அவர் பேசிய வீடியோவை இணையத்தில் பதிவு செய்ததில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். இதனால், அவரை நீதிமன்றக் காவலில் அனுப்ப நீதிபதி மறுத்தார். அதே நேரத்தில் 24 மணி நேரம் விசாரிக்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு அனுமதியின்றி பேரணியாகச் சென்றதாகத் திருமுருகன் காந்தி மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் அவரைக் கைது செய்துள்ளோம்" என்றனர். 

 மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில் திருமுருகன் காந்தியைத் திட்டமிட்டு போலீஸார் கைதுசெய்துள்ளனர். இதற்குப் பின்னணயில் யார் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும். வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றனர். 

 போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு `எங்களின் கடமையைச் செய்துள்ளோம். சட்டப்படி நடந்துள்ளோம்' என்றவரிடம் திருமுருகன் காந்தியைக் கைது செய்ய போலீஸார் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கேட்டதற்கு சிறிது அமைதிக்குப் பிறகு `அதுஎல்லாம் மேலிட உத்தரவு' என்றார். 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!