வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (11/08/2018)

கடைசி தொடர்பு:15:15 (11/08/2018)

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணிக் கரை ஓரத்தில் அமைந்துள்ளது சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டு தோறும் தை மற்றும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசைத் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 3-ம் தேதி, இரவு மதிரு ஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்திலும், 4-ம் தேதி இரவில் முல்லைச் சப்பரத்தில் சதாசிவமூர்த்தி அலங்காரத்திலும், 5-ம் தேதி இரவில் பூங்குயில் சப்பரத்தில் நடராஜர் அலங்காரத்திலும், 6-ம் தேதி இரவில் திருப்புன்னைச் சப்பரத்தில் நவநீத கிருஷ்ணன் அலங்காரத்திலும், 7-ம் தேதி இரவில் ஏக சிம்மாசன சப்பரத்தில் பாலசேர்மன் அலங்காரத்திலும், 8-ம் தேதி இரவில் தவழும் கிருஷ்ணன் கோலத்திலும், 9-ம் தேதி இரவில் வில்வச் சப்பரத்தில் ராஜ அலங்காரத்திலும், 10-ம் தேதி இரவில் சின்னச் சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி கோலத்திலும் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

eral serman arunachala swamy kovil

ஆடி அமாவாசை நாளான இன்று (11.08.2018) சுவாமி உருகுபலகை கற்பூர விலாசம் காட்சியும், சிறப்பு அபிசேகமும் நடைபெற்றது. மாலையில், இலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும் நடைபெறுகிறது. கற்பக பொன் சப்பரத்தில் நாளை 12-ம் தேதி காலை வெள்ளை சாத்தி தரிசனம், பகலில் பச்சை சாத்தி தரிசனம் மற்றும் வீதியுலா நடைபெறுகிறது.

திருவிழாவின் நிறைவு நாளான வரும் 13-ம் தேதி காலை தாமிரபரணியில் தீர்த்தவாரி நீராடலும், பகலில் ஆலிலைச் சயன அலங்காரம், மாலையில் ஊஞ்சல் சேவை மற்றும் இரவில் திருவருள்புரியும் மங்கள தரிசனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஏரல் தாமிரபரணிக் கரையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தூத்துக்குடியின் பல பகுதிகளிலிருந்து ஏரலுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க