வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (11/08/2018)

கடைசி தொடர்பு:16:00 (11/08/2018)

‘திருப்பரங்குன்றத்தை அடுத்து திருவாரூர் தொகுதியும் காலி’ - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

திருவாரூர்

தி.மு.க-வின் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காவேரி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அதன் பின் நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின் மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது அவர் உயிரிழந்த நிலையில் அந்தத் தகவல் தமிழக சட்டசபைக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டு, கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்த திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக, சபாநாயகர் அறிவிப்பாணை வெளியிட்டார். 

பின்னர் இந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இதை ஏற்றத் தேர்தல் ஆணையமும் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் உயிரிழந்ததை அடுத்து திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது திருவாரூர் தொகுதியிலும் விரைவில் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக தி.மு.க-வில் இப்போதிலிருந்தே ஆலோசனை தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அனைத்துப் பெரிய கட்சிகளும் ஆலோசனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.