வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (11/08/2018)

கடைசி தொடர்பு:17:19 (11/08/2018)

`இந்த ஆண்டு 60 சதவிகித இடங்கள் காலி!' - பொறியியல் படிப்பு பாதாளத்தை நோக்கிப் போவது ஏன்? 

கடந்தாண்டு 86,000 பொறியியல் படிப்புக்கான இடங்கள் நிரம்பிய நிலையில், இந்தாண்டு வெறும் 70,000 முதல் 72,000 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன என்ற தகவல் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

`இந்த ஆண்டு 60 சதவிகித இடங்கள் காலி!' - பொறியியல் படிப்பு பாதாளத்தை நோக்கிப் போவது ஏன்? 

ன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வை நடத்திக்கொண்டிருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். `கடந்த ஆண்டைக்காட்டிலும் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்யும் மாணவர்கள் வெகுவாகக் குறைந்துவிட்டனர். இந்த ஆண்டு 60 சதவிகித இடங்கள் காலியாகவே வாய்ப்பு அதிகம்' எனக் கவலைப்படுகின்றனர் கல்வியாளர்கள். 

50 சதவிகித அதிர்ச்சி! 

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதன்மூலம் 1,76,000 இடங்களுக்கு கவுன்சலிங் வழியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு 1,59,632 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளுக்குப் பிறகு, 1,04,000 மாணவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான தரப்பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. 1,78,000 இடங்கள் காலியாக இருந்தும், 1,04,000 பேர் மட்டுமே கவுன்சலிங்கில் நுழைந்துள்ளனர். ஐந்து சுற்றுகளாக நடக்கும் கலந்தாய்வில், தற்போது மூன்று சுற்று நிறைவடைந்துவிட்டது. இதில், எந்தெந்த கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்தார்கள், எத்தனை இடங்கள் நிரம்பியுள்ளன, என்னென்ன பிரிவுகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என வெளிவந்துள்ள அறிக்கைகளை ஆராய்ந்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது. மூன்று சுற்றுகளில் 500-க்கும் பொறியியல் கல்லூரிகள் பங்கேற்றன. இதில், 150 மதிப்பெண்ணுக்கு மேல் கட் ஆஃப் எடுத்த மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், 214 கல்லூரிகளில் பத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 71 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட கவுன்சலிங் வழியாகச் சேரவில்லை. 30 சுயநிதி கல்லூரிகளில்தான் 50 சதவிகித இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மிகப் பெரிய கல்லூரிகளில்கூட 50 சதவிகித இடங்கள் நிரம்பவில்லை. 

பொறியியல் கலந்தாய்வு விவரம்

60 சதவிகித இடங்கள் காலி! 

"மூன்று சுற்று முடிவில் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த ஆண்டு 70,000 முதல் 72,000 இடங்கள் மட்டுமே நிரப்பப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியானால், கவுன்சலிங் வழியாக நிரப்பப்படக்கூடிய இடங்களில் 60 சதவிகித இடங்கள் காலியாகவே இருக்கும். கடந்த ஆண்டு 86,000 இடங்கள் நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு வெறும் 70,000 முதல் 72,000 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன என்பது அதிர்ச்சியூட்டக்கூடியது. 'பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது' என்ற மனநிலை பரவலாகிவிட்டதைத்தான் பார்க்க முடிகிறது" என ஆதங்கத்தோடு நம்மிடம் பேசினார் கல்வியாளர் 'ஆனந்தம்' செல்வக்குமார். தொடர்ந்து நம்மிடம் சில விஷயங்களைப் பட்டியலிட்டார். 

பொறியியல் கலந்தாய்வு

ஹோட்டல் வேலை, கொத்தனார் வேலை! 

"பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா என்பதைப் பார்க்கும் முன்னர், நமது நாட்டில் தயாரிக்கக்கூடிய பொருள்கள் என்ன, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருள்கள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். அன்றாட பயன்பாட்டுக்குத் தேவையான பேட்டரி செல் முதல் பெரும்பாலான பொருள்களை சைனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இதைத் தயாரிக்கக்கூடிய தரமான பொறியாளர்கள் தேவை என்ற நிலை இங்கே உருவாகியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பொறியியல் படிப்பு முடித்தவர்களில் 6 சதவிகிதம் பேருக்குத்தான் கேம்பஸ் இன்டர்வியூக்களில் வேலை கிடைத்துள்ளது. மீதமுள்ள 94 சதவிகிதம் பேர், 6,000 ரூபாய் சம்பளத்துக்கு ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருக்கின்றனர். ஹோட்டல் வேலை, கொத்தனார் வேலை எனக் கிடைக்கும் வேலையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதையெல்லாம் கவனிக்கும் அடுத்த தலைமுறை மாணவர்கள், பொறியியல் படித்தால் இதுதான் கதி என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதுதான், பொறியியல் கவுன்சலிங்கிலும் எதிரொலிக்கிறது. 

கணிப்பொறி மோகம்! 

ஐ.டி சேவை மற்றும் நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ்காம் உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலில், '94 சதவிகிதம் பொறியியல் மாணவர்கள் வேலை செய்ய தகுதியற்றவர்களாக வெளி வருகின்றனர்' என்கிறது. பொறியியல் படித்து முடித்துவிட்டுத் தகுதியற்றவர்களாக வெளியில் வருகிறார்கள் என்றால், என்னதான் கற்றுத் தருகின்றனர்? இந்த ஆண்டு கணிப்பொறி அறிவியலை அதிகப்படியான மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். கணிப்பொறி மீது மக்களுக்கு இன்னமும் மோகம் இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது. மெக்கானிக்கல் துறையைக் கணிசமான மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். சிவில் துறையில் சேர்க்கை பெரிதும் குறைந்திருக்கிறது. கம்ப்யூட்டர், ஐ.டி துறைகளில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், ஐ.டி துறையில் நிதர்சனமான உண்மையைக் கவனிக்க இவர்கள் தவறிவிட்டனர். செயற்கை நுண்ணறவுத்துறையில் ஆராய்ச்சிகள் நடந்து வரும் சூழலில், ஐ.டி துறையில் அடுத்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் வேலையிழக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. 

பொறியியல் கலந்தாய்வு

வெறும் 13,402 பேர்! 

இந்தியாவில் உள்ள 6 மிகப் பெரிய ஐ.டி நிறுவனங்களில் கடந்த வருடம் முதல் ஆறு மாதத்தில் 60,244 பேர் வேலைக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடம் முதல் ஆறு மாதத்தில் 13,402 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். இந்த ஆண்டே இப்படியொரு நிலை என்றால், செயற்கை நுண்ணறிவுத்துறை வளரும்போது கணிப்பொறி அறிவியல் படித்து வரும் மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை. அப்படியிருந்தும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவைத் தேர்வு செய்யக் காரணம், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததுதான். என்ன அடிப்படையில் படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதற்குப் பள்ளிக் கல்வித்துறையும் கல்லூரி கல்வித்துறையும் தவறிவிட்டதைத்தான் பார்க்க முடிகிறது. தொழில்நுட்பம் தாண்டி எங்கே சிக்கல் என்பதையும் பார்க்க வேண்டும். 

பின்னுக்குத் தள்ளும் 16 வருடம்! 

ஆனந்தம் செல்வக்குமார்கிட்டத்தட்ட 16 வருடத்துக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தையே கடைப்பிடித்து வருகிறோம். தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ற பாடத்திட்டங்கள் இங்கே இல்லை. படிப்புக்கும் வேலைக்கும் இடைவெளி அதிகமாக இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பதைக் கவனித்து மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வேண்டும். இதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களைத் தயார் செய்ய வேண்டும். மாதம்தோறும் தொழில்நுட்பம் மாறிக்கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் போன்ற மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் இதை முன்னெடுக்க வேண்டும். மிகப் பெரிய தனியார் பொறியியல் கல்லூரிகளும், 'வேலை வாங்கித் தருவது மட்டும்தான் எங்களுடைய வேலை' என்றில்லாமல், இன்று இருக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்களில் கல்லூரிகள் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் தகுதியான மாணவர்களை உருவாக்க முடியும். பாடத்திட்டத்தைத் தாண்டி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தஙகளுடைய மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் சில கல்லூரிகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நிரம்பியுள்ளதையும் கவனிக்க முடிகிறது. 

செயற்கை நுண்ணறிவும் பிளாக் செயினும்! 

அதே சமயம், மாணவர்களும் 'அரசு சரியில்லை; ஆசிரியர் சரியில்லை' என்று சொல்வதைவிட்டுவிட்டு, இணையத்தளம் நம் கையில் இருக்கிறது. எந்தத் துறையின் தலைப்பைப் போட்டாலும் பாடம் தொடர்பான ஏராளமான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. வெறும் சி, சி++, ஜாவா முடித்தால் முன்னேற முடியாது. அடுத்த பத்து வருடத்தில் வரக்கூடிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். வரக்கூடிய 30 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுத்துறை உலகை ஆளப்போகிறது. மனிதர்கள் செய்யக் கூடிய வேலையை இனி இயந்திரங்களே மேற்கொள்ளும். கம்ப்யூட்டர் இன்ஜினீயர் எழுதக்கூடிய கோடிங்கை, இனி இயந்திரங்கள் எழுதும். 

சென்னையில் கிளாஸ் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம் ஒன்றின் இரண்டாவது யூனிட்டில் இயந்திரங்களின் உதவியோடு பணிகளைச் செய்து வருகிறார்கள். 3,000 பேர் செய்யக்கூடிய வேலையை, 300 இயந்திரங்களை வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence), பிளாக் செயின் தொழில்நுட்பம், காற்றில் இருந்து நீரை எடுப்பது, மருந்து தொடர்பான புதிய தொழில்நுட்பம், டேட்டா சயின்ஸ், டீப் லேர்னிங், பயோனிக்ஸ், ஜீனோமிக் வேசின் (Genomic vaccine) ஆகிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆன்லைன் கரன்சியான பிட் காயினின் அட்வான்ஸ் தொழில்நுட்பம்தான் பிளாக் செயின். இதுதான் இனி உலகை ஆளப் போகிறது. நீங்கள் படிக்கும் கல்லூரியில் தொழில்நுட்ப வசதிகளே இல்லாவிட்டாலும், இதையெல்லாம் கற்று அறிந்து கொண்டால் மட்டுமே, முன்னேற்றத்தை நோக்கி நடக்க முடியும்" என்றார் உறுதியாக.