வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (11/08/2018)

கடைசி தொடர்பு:17:30 (11/08/2018)

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 10 வேட்டைநாய்கள்! - நெல்லை சோகம்

நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் வளர்த்து வந்த 10 வேட்டைநாய்கள் உணவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கொல்லப்பட்ட நாய்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது, கீழநீலிதநல்லூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தங்களுடைய வீட்டில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி வகையான வேட்டைநாய்களை வளர்த்து வருகிறார்கள். வீட்டின் பாதுகாப்புக்கு இந்த வகை நாய்கள் சிறப்பானவையாக அமையும். அத்துடன், தோட்டத்தில் இரவு நேரங்களில் தண்ணீர் பாய்ச்சுவதற்குச் செல்லும்போது நாயையும் உடன் அழைத்துச் செல்வதை விவசாயிகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 

இந்த வகை நாய்கள் மிகுந்த மோப்பசக்தி கொண்டவை என்பதால் இருளில் மறைந்து கிடக்கும் பாம்புகளை விரட்டிவிடும். அத்துடன், அச்சுறுத்தும் காட்டு விலங்குகளையும் அருகில் வரவிடாமல் விரட்டும் திறமை கொண்டது. இந்த வகை நாய்களின் விலை அதிகமாக இருந்தபோதிலும், அவசியம் கருதி விவசாயிகள் அவற்றை வளர்த்து வருகிறார்கள். அதன்படி, கீழநீலிதநல்லூர் கிராமத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அவற்றை வளர்த்து வருகிறார்கள். 

இந்த நாய்கள், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆடுகளை கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், ஆட்டு இறைச்சியில் விஷத்தைக் கலந்து நாய்களுக்கு உணவாகக் கொடுத்துவிட்டார். அதை உட்கொண்ட 10 நாய்கள் மயக்கம் அடைந்து அங்கேயே உயிரிழந்தன. இதுபற்றி அறிந்ததும் விவசாயிகள் மிகுந்த சோகம் அடைந்தனர். உடனடியாக இது குறித்து பனவடலி சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

வேட்டைநாய்கள்

போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி என்ற திருமலைச்சாமி என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாய்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய கால்நடை மருத்துவர்களைக் கொண்டு உடல்கூறு சோதனை நடத்தப்பட இருப்பதாகத் தெரிவித்த காவல்துறையினர், அதன் முடிவுக்குப் பின்னரே உண்மை நிலவரம் பற்றி தெரிவிக்க முடியும் எனக் கூறினார்கள்.