`தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்!’ - வியனரசு நம்பிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை மூலம், 13 பேரின் உயிரிழப்பிற்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு தெரிவித்துள்ளார். 

வியனரசு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அளிப்பவர்கள், சாட்சியம் அளிப்பவர்கள் கடந்த ஜூன் 22-ம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு, பின்பு அந்த காலக்கெடு ஜூலை 27-ம் தேதி வரை நீட்டிக்கபட்டது.

சாட்சி சொல்பவர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்ட நிலையில், தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள ஆணைய முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த சில நாள்களாக மேற்கொண்டார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒருவரான மாணவி ஸ்னோலினின் தாய் வினிதா உள்ளிட்ட 14 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கிடையே, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வெளியே வந்துள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு தன்னிடம் உள்ள ஆவணங்களை தயார் செய்து கடந்த 27 ஆம் தேதி 7 பக்க பிரமான பத்திரமாக ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில், அவருக்கு இன்று (11.08.18) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இதையெடுத்து, தூத்துக்குடியில் உள்ள முகாம் அலுவலகத்தில் வியனரசு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடிடவும், 25 ஆண்டு கால பிரச்சினைக்காக இறுதித் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில், ஆட்சியர் அலுவலகம் நோக்கி கட்சிகள், அமைப்புகள் சார்பில்லாமல் மக்கள் திரள் பேரணி நடைபெற்றது. காவல்துறை எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான்  2 பெண்கள் உட்பட 13 அப்பாவிகள் உயிரிழந்தனர். நானும், மண்டலச் செயலாளர் இசக்கிதுரையும் சிறையில் இருந்தபடியே உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தோம். அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறோம். மீண்டும் அழைப்பாணை அனுப்பி இது தொடர்பாக விசாரணை செய்வதாக நீதியரசர் அவர்கள் கூறியுள்ளார்கள்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் புரட்சி நடத்திய இந்த மண்ணில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உயிரிழப்பிற்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.” என்றார். துப்பாக்கிச் சூடு சம்பவம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், துப்பாக்கி சூடு தவிர்க்கபடாமல் இருக்க வரும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய மாற்றுத்திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆணையத்திடம் எடுத்துக் கூறியதாகவும் அவர் கூறினார்.   

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!