”ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லை!” – கேரள மாநிலம் ஆலுவாவில் இருந்து ஓர் குரல்!

கடந்த ஒரு வாரமாக கேரளாவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ராணுவ உதவியோடு மீட்கும் நடவடிக்கை துரிதமாக நடந்துவருகிறது.

மழை

இந்நிலையில், வெள்ளப்பாதிப்பு குறித்து அறிந்துகொள்வதற்காக கொச்சின் அருகில் உள்ள ஆலுவா நகரத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் போனில் பேசினோம். அப்போது அவர் உருக்கமாக தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில், “மறக்க முடியாத அனுபவத்தை இந்த மழை எங்களுக்கு கொடுத்துவிட்டது. திடீரென பெரியாறு ஆற்றில் வெள்ளம் வந்தது. என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே எங்கள் குடியிருப்பிக்குள் தண்ணீர் வந்துவிட்டது. வீட்டின் தரைதளம் முழுவதுமாக தண்ணீரால் மூழ்கிவிட்டது. உடனே மொட்டை மாடிக்கு வந்துவிட்டோம். சாப்பாடு இல்லாமல் ஒரு நாள் முழுவதும் இருந்தோம். எங்களை சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும் அதனை குடிக்க முடியவில்லை. அருகில் இருக்கும் வீட்டில் வசிப்பவர்களிடம் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்துக்கொண்டோம். ஒரு கட்டத்தில் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது தான் மீட்புக் குழுவினர் படகில் வந்து எங்களை மீட்டனர். படகில் ஏறி நிவாரண முகாமுக்கு வந்துவிட்டோம். வீட்டையும், எங்கள் உடைமைகளையும் தண்ணீருக்கு காவு கொடுத்துவிட்டு வந்தது வேதனையாக இருக்கிறது” என்றார் கண்ணீரோடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!