`என் பாட்டும்; கண்ணீரும் கருணாநிதியை காப்பாற்றி இருக்கும்' - டி.ராஜேந்தர் உருக்கம்!

என்னை அனுமதித்து இருந்தால் நான் பாட்டு பாடி கண்ணீர் சிந்தியிருப்பேன். என் பாட்டும் எனக் கண்ணீரும் கலைஞரைச் சிலிர்த்து எழ வைத்திருக்கும் என திருவையாறில் டி.ராஜேந்தர் உருக்கமாகத் தெரிவித்தார். 

டி ராஜேந்தர்

நடிகர் டி.ராஜேந்தர் தஞ்சாவூர் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறைக்கு இன்று மாலை வந்தார். அப்போது படித்துறையில் பூ, பழங்கள், காதோலை கருகமணி, பொங்கல் என அனைத்தையும் படையலிட்டு காவிரி தாய்க்கு தீபம் ஏற்றி ஆரத்தி காட்டினார். பின்னர் டிரம்ஸ் அடித்துக் கொண்டு காவிரி தாயே தாயே என பாட்டு பாடி காவிரிக்கு நன்றி சொன்னார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ``காவிரியில் தண்ணீர் வராமல் தஞ்சை காய்ந்து வறண்டு கிடக்கிறது. காவிரி தாயே நீ தான் காப்பாற்ற வேண்டும் என்றும் தண்ணீரை ஏன்  நாம் கர்நாடகாவிடமும், மத்திய அரசிடமும் கேட்க வேண்டும்  நம் காவிரி தாயிடமே கேட்டால் என எண்ணி சில மாதங்களுக்கு முன் திருவையாறு காவிரி ஆற்றிற்கு வந்து காவிரித் தாயே தாயே தஞ்சை காய்ஞ்சு போச்சு, நஞ்சை காய்ஞ்சு போச்சு நீதான் கைகொடுக்க வேணும் என வறண்ட ஆற்றுக்குள் இறங்கி மெழுகுவத்தி ஏந்தி மண்டியிட்டுக் கண்கலங்கி பாட்டு பாடினேன்.  

பாட்டுப்பாடி காவிரியை வரவழைக்கிறானாம் என அன்றைக்கு என்னை எல்லோரும் ஏளனமாய் பார்த்து சிரித்தார்கள். ஆனால் நான் கேட்டது போலவே இன்றைக்குக் காவிரி தாய் குடகில் இருந்து ஆடிப் பாய்ந்து வருகிறாள். அந்தத் தாய்க்கு இன்று நான் நன்றி கூறி மரியாதை செலுத்தினேன். என்னை இந்த அளவிற்கு ஆளாக்கியவள் காவிரி. என்னிடம் எதுவுமே இல்லாமல் படித்துறையையே டிரம்ஸாக, மூங்கில் குச்சியையையே ஸ்டிக்காக கொண்டு இசைத்து பாட்டு பாடி கற்றுக் கொண்டேன். எனக்கு இசையைக் கொடுத்த காவிரி என்னையும் ஆளாக்கினாள். நான் அரசியல்வாதியாக இங்கு வரவில்லை ஆன்மீகவாதியாகவே வந்திருக்கிறேன்.

டி ராஜேந்தர்

என் மகன் சிம்பும் ஆன்மீகவாதியாக வருவான். என் குருநாதர் கலைஞர் உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது நான் அவரைப் பார்க்க சென்றேன். ஆனால் என்னை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. நான் கலைஞரை பார்த்து இருந்தால் பாட்டு பாடி கண்ணீர் சிந்தியிருப்பேன். என் பாட்டும் கண்ணீரும் கலைஞரை சிலிர்த்து எழுந்து உட்கார வைத்திருக்கும்" என உருக்கமாகக் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!