வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (12/08/2018)

கடைசி தொடர்பு:10:51 (12/08/2018)

கருணாநிதியோடு முடிந்தது இசட் பிளஸ் பாதுகாப்பு..!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தமிழ்நாட்டில் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த ஒரே தலைவர் கருணாநிதி மட்டும்தான். கருணாநிதி மறைந்தபின்னர், தமிழ்நாட்டில் இசட் பிளஸ் என்ற பாதுகாப்பு அம்சத்துக்கே வேலை இல்லாமல் போய் விட்டது.

தி.மு.க. தலைவர்  கருணாநிதியின் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வந்த 'இசட்-பிளஸ்' கமாண்டோ வீரர்கள், கருணாநிதி மறைவுக்குப் பின்னே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர். வி.ஐ.பிகளுக்கான உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆண்டு தோறும் மத்திய உளவுத்துறை அறிக்கையைத் தாக்கல் செய்யும், அந்த அறிக்கையின்படி இந்தியாவில், 24 பேருக்கு வி.வி.ஐ.பி அந்தஸ்தில் இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. எக்ஸ், ஒய் மற்றும் இசட் ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாக்கப்படுகிற வி.ஐ.பி.களுக்கு, இன்னும் பாதுகாப்பை அதிகப்படுத்த 'இசட்-பிளஸ்' பாதுகாப்பை அளிக்க வேண்டுமா என்பதையும், இருப்பதையேக் குறைக்கலாமா என்பதையும், அந்த அறிக்கைதான் தீர்மானிக்கும்.

கூடுதல் பாதுகாப்பு என்றால், அது, 'இசட்-பிளஸ்' என்கிற உச்சக்கட்டப் பாதுகாப்பைக் குறிக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் 'இசட்-பிளஸ்' கமாண்டோ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு 2016-ம் ஆண்டும், கருணாநிதிக்கு கடந்த சில நாட்கள் முன்பும் அவர்கள் இறப்பின் காரணமாக இசட்-பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு விட்டது.

கருணாநிதி 

ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் என்ற அடிப்படையில், 1991-ம் ஆண்டில் இருந்து இசட்- பிளஸ் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்தது. கருணாநிதிக்கு 1997-ம் ஆண்டு முதல் இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமிக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை இசட்-பிளஸ் பாதுகாப்பு இருந்தது. மத்திய அரசின் உளவுத்துறை அறிக்கையின் படி, சுப்பிரமணியன்சுவாமிக்கு கொடுக்கப்பட்டு வந்த இசட்-பிளஸ் பாதுகாப்பு, திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

2009- முதல், அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு மட்டுமே அளிக்கப்பட்டுவருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு கமாண்டோ படை பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இசட் பிளஸ் பாதுகாப்பில், தேசிய பாதுகாப்புப் படையின் (என்.எஸ்.ஜி) வீரர்கள், ஷிப்ட்டுக்கு 8 பேர் என்ற எண்ணிக்கையில், 'மெஷின் கன்' னுடன் பாதுகாப்பு அளிப்பார்கள். மூன்று ஷிப்ட்கள் முறையில் மொத்தம் 24 பேர் இதற்கான பணியில் இருப்பார்கள். கருணாநிதிக்கும் இந்த எண்ணிக்கையில்தான் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதாவுக்கு இதை விட எண்ணிக்கையில் சற்றே கூடுதலாக ஷிப்ட்டுக்கு 10 பேர் என 40 பேர் பணியில் இருப்பார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தமிழ்நாட்டில் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த ஒரே தலைவர் கருணாநிதி மட்டும்தான். கருணாநிதி மறைந்தபின்னர், தமிழ்நாட்டில் இசட் பிளஸ் என்ற பாதுகாப்பு அம்சத்துக்கே வேலை இல்லாமல் போய் விட்டது.