வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (12/08/2018)

கடைசி தொடர்பு:08:35 (12/08/2018)

5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

கனமழை

தற்போது தென்மேற்குப் பருவமழை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மிகத் தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக தென்மேற்கு பருவ மழையால் கேரள மலைப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை தற்போது கேரளாவில் பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. வெள்ளம் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது தமிழகத்திலும் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு ஆந்திர கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.