கேரளாவில் பெரும் வெள்ளம் -நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கியது தி.மு.க

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிவாரண நிதியை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று வழங்கினார். 

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், இடுக்கி அணை உட்பட 24 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், வயநாடு, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகி வருகின்றன.

வெள்ளம் பாதித்த இடங்களில் ராணுவம், தேசிய பேரிடர் குழுவினர் ஆகியோர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். 

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி வழங்குவதாக தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், `கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டு போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், தி.மு.க அறக்கட்டளை சார்பாக ``முதலமைச்சர் நிவாரண நிதி''-க்கு ஒரு கோடி ரூபாயினை தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று (12-08-2018) வழங்கினார். இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!