வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (12/08/2018)

கடைசி தொடர்பு:16:49 (12/08/2018)

பிழை திருத்தி... சிலை நிறுத்தி... தமிழ் வளர்த்த கருணாநிதி!

தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தமிழ்த் தொண்டாற்றியவர் கருணாநிதி. ‘தமிழ்... தமிழ்’ என்று தம் மூச்சுக்காற்றை இறுதிவரை சுவாசித்துக் கொண்டிருந்தவர் கருணாநிதி.

பிழை திருத்தி... சிலை நிறுத்தி... தமிழ் வளர்த்த கருணாநிதி!

சைத் தமிழில் பிறந்து... நாடகத் தமிழில் வளர்ந்து... இயற்றமிழால் வாழ்ந்து மறைந்தவர் கருணாநிதி. அவர், மூன்று தமிழுக்கும் தம் பங்களிப்பைச் செய்ததால்தான் ‘முத்தமிழ் அறிஞர்’ என்று போற்றப்படுகிறார். ஒளவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்து... தமிழை வாழவைத்த அதியமானைப்போல... தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தமிழ்த் தொண்டாற்றியவர் கருணாநிதி. ‘தமிழ்... தமிழ்’ என்று தம் மூச்சுக்காற்றை இறுதிவரை சுவாசித்துக் கொண்டிருந்தவர் கருணாநிதி. தள்ளாத வயதிலும் தம் எழுதுகோலோடு போட்டிபோட்டுக்கொண்டு இருந்தவர். தமிழுக்காக அவர் ஆற்றிய தொண்டுகளில் இதோ சில...

கருணாநிதி

‘‘தமிழைப் பிழையின்றி எழுதச் சொல்லுங்கள்!’’

1990. நம்மைவிட்டுக் கடந்துபோன எத்தனையோ ஆண்டுகளில் இதுவும் ஒன்று. இந்த ஆண்டில் எத்தனையோ சுவையான, துயரமான சம்பவங்கள் அரங்கேறியிருக்கலாம். அது, இப்போதைக்கு நமக்குத் தேவையில்லை. தமிழ்மீது கருணாநிதி எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் உதாரணம். அந்த ஆண்டு தமிழக முதல்வராய்ப் பதவி வகித்தவர் கருணாநிதி. அதே ஆண்டில், உலகத் திரைப்பட விழாவும் சென்னையில் நடைபெற்றது. விழாவில், சில தமிழ்ப் படங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தன. அதற்காக, பழைய படங்கள் அடங்கிய ஒரு பட்டியல் முதல்வரின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. முன்னதாகவே, ஒருசிலர் அதைப் படித்துப் பார்த்திருந்தனர். முதல்வருக்கு இருக்கும் வேலைப் பளுவால்... இதனை எல்லாம் அவர் எங்கே பார்க்கப் போகிறார் என்ற சிறுதயக்கத்துடனே தள்ளி நின்றார், அந்தப் பட்டியலைக் கொடுத்தவர். அதில், ‘கண்ணகி’ படமும் இடம்பெற்றிருந்தது. பட்டியலை வாங்கிப் பார்த்த கருணாநிதி, ‘கன்னகி’ என்று எழுதியிருந்ததை... ‘கண்ணகி’ என்று திருத்தி எழுதிக் கொடுத்தார். அத்துடன், ‘‘தமிழைப் பிழையின்றி எழுதச் சொல்லுங்கள்’’ என்று அன்பு கட்டளையிட்டார். இந்த நிகழ்வு, பட்டியல் தயாரித்தவர்களை... ‘செய்வன திருந்தச் செய்ய வேண்டும்’ என்பதற்கு வழிகாட்டியது. மேலும், பிழையில்லாமல் தமிழ் எழுத வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தது.

‘‘தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட வேண்டும்!’’

தன் பிழைப்புக்காக எழுதிய பலர் மத்தியில்... ‘தமிழ்’ பிழைப்பதற்காக எழுதிய வித்தகர் கருணாநிதி. தன்னுடைய தாய்மொழிமீது எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதற்கு மற்றுமோர் உதாரணம் இது. 1970-ம் ஆண்டு, மார்ச் மாதம், தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அந்தச் சமயத்தில், திரைப்படக் கலைஞர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படும் நிகழ்வு நடந்தது. அந்த நாளில்தான், அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவதற்காக, ‘‘இனி, தமிழக அரசு நிகழ்ச்சிகளில்... தொடக்கத்தில் இறைவணக்கம் பாடுவதற்குப் பதிலாக, தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட வேண்டும்; ‘நீராருங் கடலுடுத்த...’ எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக அமையும்’’ என்கிற ஓர் அருமையான அறிவிப்பை வெளியிட்டார் கருணாநிதி. அது, அறிவிப்பாக நின்றுவிடாமல், அரசு ஆணையாகவும் மாற்றினார். அன்றுமுதல், தமிழ்த்தாய் வாழ்த்தான... ‘நீராருங் கடலுடுத்த...’ என்ற பாடலே அரசு, சமூக, இலக்கிய விழாக்களில் இன்றும் ஒலிக்கப்படுகிறது. விழாக்களின் தொடக்கத்தில் கடவுளை வாழ்த்திப் பாடும் முறையை மாற்றி... தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடும்படிச் செய்தவர் கருணாநிதி. 

கருணாநிதி

‘‘வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட வேண்டும்!’’

வாழ்க்கையின் நெறிமுறைகளை எல்லாம் இரண்டு வரிகளுக்குள் திருக்குறளாய் அடைத்து... அந்தத் திறனறியில் உலகையே வென்றவர் திருவள்ளுவர். அந்தக் குறள், இன்று 60-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இப்படிச் சிறப்புறப் போற்றப்பட்ட, உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்குச் சிறப்புச் செய்ய வேண்டும் என்ற, தமிழ்ச் சான்றோர்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கியவர் மு.கருணாநிதி. 1976, ஜனவரி மாதம். முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் கருணாநிதி,  ‘சென்னையில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று முடிவெடுத்து, அவருடைய மேற்பார்வையிலேயே கட்டியும் முடிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய அரங்குகளில் ஒன்றாகத் திகழும் இந்த வள்ளுவர் கோட்டத்தில், திருக்குறளின் முப்பாலும் வெவ்வேறு நிறங்களில் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பெற்றுள்ளன. முக்கடல் சங்கமிக்கும் குமரியிலே வான்புகழ் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைத்து அழகுபார்த்த கருணாநிதி, ‘‘என் நெஞ்சு ஓயாது உச்சரித்துக்கொண்டிருக்கும் உணர்ச்சிமிக்க சொற்றொடர், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதைப்போல, ‘அனைவரும் சமம்... அய்யன் வள்ளுவனே தெய்வம்’ ’’ என்ற சொற்றொடரையும் தமிழ் உலகுக்கு அர்ப்பணித்தார். 2010-ம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார். முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியால், தமிழர்களின் நூற்றாண்டு காலக் கனவு நனவானது. ஆம். தமிழ், செம்மொழி அந்தஸ்து பெற்றது. ‘‘செம்மொழியாம் தமிழ் வாழ்க... செந்தமிழர் நலம் வாழ்க... சீர்மிகு தமிழகம் செழித்தோங்கி வளர்ந்திடுக’’ என்று தமிழுக்காகவும், தமிழருக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் ஏடு உள்ளவரை என்றும் நிலைத்து நிற்கும்.

காலங்கள் கடந்தாலும்... 21-ம் நூற்றாண்டிலும் தமிழுக்காக... தமிழ்மீது உள்ள பற்றுக்காக என்றும் வாழ்ந்து மறைந்தவர் ஒருவர் உண்டென்றால், அது மு.கருணாநிதியாக மட்டும்தான் இருக்க முடியும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்