ராமேஸ்வரம் கோயில் விமர்சையாக நடைபெற்ற ஆடித் திருவிழா திருத்தேரோட்டம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருவிழா அம்மன் திருத்தேரோட்டம் இன்று காலை விமர்சையாக நடந்தது.

ராமேஸ்வரம் கோயில் ஆடித் திருவிழா திருத்தேரோட்டம்


இந்துக்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றாக விளங்கி வருவது ராமேஸ்வரம். இங்குள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மாலை மாற்றுதல் வைபவம் மற்றும் சுவாமி-அம்மன் திருக்கல்யாணம் ஆகியன வரும் 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடக்க உள்ளது.

இதையொட்டி இன்று காலை பர்வதவர்த்தினி அம்மன் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இன்று காலை கன்னி லக்கனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பர்வதவர்த்தினி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி கோயிலின் ரத வீதிகளில் பவனிவந்தது. பக்தர்கள் பக்தியுடன் தேர் வடத்தினை பிடித்து இழுத்து வர அம்மனின் திருத்தேர் ரதவீதிகள் வழியாக நிலையினை அடைந்தது. அங்கு பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் திருக்கோயில் தக்கார், இளையமன்னர் குமரன்சேதுபதி, இணை ஆணையர் மங்கையர்கரசி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், உள்ளூர் வெளியூர் பக்தர்கள், அரசு அலுவலர்கள், பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!