வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (12/08/2018)

கடைசி தொடர்பு:19:41 (12/08/2018)

`வெளியாகாத மாவட்டத்தில் விரைவில் விஸ்வரூபம் 2 திரையிடப்படும்' - கமல்!

விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகாத மாவட்டங்களில் விரைவில் படம் வெளியாகும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்

கிண்டி ஓடிஏவில் விஸ்வரூபம் 2 படத்திற்கு 10 நாள் காட்சிகள் எடுக்கப்பட்டதால், அங்குள்ள ராணுவ அதிகாரி பயிற்சியாளர்களுடன் சேர்ந்து நடிகர் கமல்ஹாசன் படம் பார்த்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், `ஓ.டி.ஏவில் பயிற்சி எடுத்த காலம் குறுகியது தான், ஆனால் கற்றுக்கொண்டது நிறைய. இந்திய ராணுவத்தில் நாம் அதிகம் பங்கெடுக்க வேண்டும் அது என்னுடைய ஆசை. பயிற்சியின் போது இடம்பெற்ற ராணுவ அதிகாரிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். படத்திற்காக பலமுறை பயிற்சி எடுத்து இருந்தால் கூட இந்த அளவிற்கு படம் வந்திருக்காது.

ஆனால் இங்குள்ள உண்மையான ராணுவ வீரர்கள் உடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. விஸ்வரூபம் 2 வெளியிடப்படாத மாவட்டங்களில் படம் நிச்சயமாக வெளியாகும். படத்தை தடைவிதிக்க பின்புலத்தில் இருந்து நிறைய பேர் வேலை செய்கிறார்கள் அவர்கள் யார் என்று நான் சொல்லமாட்டேன். எனவே நிச்சயம் இது சரி செய்யப்படும். படித்த இளைஞர்கள் அதிகாரிகளாக வர வேண்டும், இதுவும் அவர்கள் கடமையென நாடு காக்கும் பணியை செய்ய முன்வர வேண்டும். ஆனால் யாரையும் கட்டாயபடுத்தக்கூடாது. படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை, எதிர்மறையாகவே பார்க்க வேண்டும், எதிர்கொள்ள வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.