வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (12/08/2018)

கடைசி தொடர்பு:21:40 (12/08/2018)

30 ஆண்டுக்குப் பிறகு வீராணத்திலிருந்து பெருமாள் ஏரிக்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. இந்த ஏரி சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்கா விவசாயிகளின் வாழ்வாதரமாக உள்ளது. வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

வீராணம் ஏரி

தற்பொழுது ஏரியின் நீர் மட்டம் 46.70 அடி உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். கீழணையில்  வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டத்தை 46.70 அடியாகவே வைத்திருப்பது என்று பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். ஏரிக்கு வரும் உபரி நீரை விவசாய பணிக்காக சேமிக்கும் பொருட்டு ஏரியின் வடிகால் மதகுகளில் ஒன்றான விஎன்எஸ்எஸ் வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு விநாடிக்கு 850 கன தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியில் சென்னைக்கு விநாடிக்கு 66 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் 6.3 அடி உள்ளது


இந்த அணைக்கட்டின் முழு கொள்ளளவு 7.50 அடியாகும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து வெள்ளாறு ராஜன் வாய்க்கால் வழியாக நெய்வேலி அருகே உள்ள வாலாஜா ஏரிக்கு விநாடிக்கு 470 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. காலையில் இருந்து வாலாஜா ஏரியில் இருந்து விநாடிக்கு 420 கன அடி குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரிக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. இது அப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30 வருடத்துக்கு பிறகு வீராணம் ஏரியில் இருந்து பெருமாள் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். காவிரியில்  அதிக அளவில் தத்ண்ணீர் வருவதால்  தண்ணீரை சேமிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளததாக கூறப்படுகிறது.