வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (12/08/2018)

கடைசி தொடர்பு:21:00 (12/08/2018)

மேற்குத் தொடர்ச்சி மலையில் வைரம் திருடிய கேரள கும்பல் கைது!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு வனப்பகுதியில் வைரம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

வனத்துறை பிடியில் வைரம் திருடிய கும்பல்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு மலையில் வைரம் கிடைப்பதாக கூறப்படுகிறது. அடர்ந்த வனத்தின் உள்ளே இருக்கும் மலைகளில் வைரக்கற்கள் கிடைப்பதாக நம்பப்படுவதால், அடிக்கடி அவற்றை தேடி சிலர் வனப்பகுதிக்குள் செல்கிறார்கள். மலையில் கிடைக்கும் வைரக்கற்களை எடுப்பதற்காக கேரளாவில் இருந்து ஏராளமானோர் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்யப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.

தற்போது பாபநாசம் மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடந்து வருவதால், அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் வனத்துறையினர் அங்கு முகாமிட்டிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்த கேரளாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று, உள்ளூரைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் ஊருடுருவியது. 

அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அம்பாசமுத்திரம் சரகத்துக்கு உட்பட்ட எலுமிச்சை ஆறு பகுதியில் உள்ள ஒத்தப்பனை வனப்பகுதியில் வைரம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், வனத்துறையில் தற்போது கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதால், அந்தக் குழுவினர் அந்த பகுதியில் சோதனைக்குச் சென்றனர். அப்போது காட்டுப் பகுதியில் மலையை வெட்டும் சத்தம் கேட்டதால் வனத்துறையினர் அங்கு சென்றனர்.

அப்போது ஒரு கும்பல் பாறைகளை உடைத்து வைரக்கற்கள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு அவர்களை சுற்றி வளைத்தனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் மட்டும் காட்டுக்குள் ஓடித் தப்பிவிட்ட நிலையில், மற்றவர்களை வனத்துறையினர் வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மணிமுத்தாறு மலைப்பகுதியில் கிடைக்கும் வைரக்கற்களைத் தோண்டி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதை அந்த நபர்கள் ஒப்புக் கொண்டனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிஜூவ், ஆலப்புழாவைச் சேர்ந்த சந்திரதாசன், கொல்லத்தைச் சேர்ந்த அபிராஜ் மற்றும் நெல்லை மாவட்டம் அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், தங்கவேல் ஆகிய 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர், அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.