வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (12/08/2018)

கடைசி தொடர்பு:20:00 (12/08/2018)

`கத்துக்குட்டிக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை' - ஜெயானந்த்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி!

திவாகரன் மகன் ஜெயானந்த் இடைத்தேர்தல் குறித்து தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த டி.டி.வி தினகரன் ``கத்துக்குடிக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி தினகரன்


சென்னை அசோக் நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன் ``தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகள் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் அது குறித்து ஆலோசிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அ.ம.மு.க போட்டியிட்டு வெற்றிபெறும். உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் உறுப்பினர் சேர்க்கை குறித்த முழு விவரம் தெரிவிக்கப்படும். ஒரு கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று நம்புகிறேன்.  கூட்டணி குறித்து தற்போது ஆலோசிக்கவில்லை. நிறைய கட்சிகள் எங்கள் வளர்ச்சியை கண்டு வியந்துள்ளனர், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.

பேட்டி

சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கும் சேர்ந்து தேர்தல் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு கொடுத்தது போல், திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது உரிய நேரத்தில் அவர்களே கொடுப்பார்கள். மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நிறைய கட்சிகள் எங்ளோடு உணர்வுப்பூர்வமான கூட்டணி வைக்க பேசி வைக்கிறார்கள். இறுதி வடிவம் பெற்றபின் அறிவிக்கப்படும். பெரும்பாலானோர் அ.தி.மு.கவை சேர்ந்தவர்களாக உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி தேர்தல் குறித்து பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்ற ஜெயானந்த் திவாகரன் கருத்துக்கு, பதிலளித்த அவர், `கத்துக்குட்டிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் விமர்சகர்களுக்கு பதில் அளிப்போம். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.