யோகா செய்து அசத்திய குட்டீஸ்!

மதுரை மாவட்ட யூத் ஸ்போர்ட்ஸ் அசோஸியேஷன் என்னும் அமைப்பு சார்பாக, முதலாமாண்டு யோகா போட்டிகள் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்றன. காலையில் தொடங்கி மாலைவரை நடைபெற்ற இப்போட்டிகளில் கலந்துகொண்ட குழந்தைகளுக்குச் சான்றிதழ்களும், வெற்றிபெற்றவர்களுக்குப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பொதுப்பிரிவு, சிறப்புப்பிரிவு, யோகா மாரத்தான் என மூன்று பிரிவுகளாய் இப்போட்டிகள் நடந்தன.

யோகா

அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 550 குழந்தைகள் இப்போட்டிகளில் பங்குபெற்றனர். இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பேசும்போது, “இந்த அமைப்பு முதன்முறையாய் இவ்வாண்டு யோகா போட்டிகளை  நடத்தியுள்ளது. இனி, ஒவ்வோர் ஆண்டும் போட்டிகள் நடத்தி, குழந்தைகளை உற்சாகப்படுத்துவோம்! குழந்தைகள், பள்ளிப்பாடங்களைப் பயில்வதோடு, பல்துறை அறிவுபெற வேண்டும். யோகா போன்ற மனப்பயிற்சிகள் அதற்குத் துணை புரியும்” என்றார்.

வயது வரம்புகளை அடிப்படையாகக்கொண்டு பல கட்டங்களாகப் போட்டிகள் நடைபெற்றன. தாங்கள் கற்ற யோகாசனங்களை நடுவர்களின் முன்னிலையில் மாணவ-மாணவியர் செய்து காண்பித்து அசத்தினர். பின்னர் மாணவர்களிடம் உரையாடும்போது, தினமும் யோகா செய்வதாகவும், இதுபோன்ற பயிற்சிகளுக்குப் பெற்றோர்களும், பள்ளிகளும் ஊக்கம் தருவதாகவும் கூறினர்.

யோகா பயிற்றுநரும் போட்டிகளின் நடுவர்களுள் ஒருவருமான மணிகண்டன் கூறுகையில், “மாணவர்கள், யோகாசனங்களைத் தடுமாற்றமின்றி கச்சிதமாக நிகழ்த்திக்காட்டுவதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் மிகவும் சுறுசுறுப்பாகத் தயாராகின்றனர்!” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!