வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (13/08/2018)

கடைசி தொடர்பு:10:39 (13/08/2018)

ஆபத்தான நிலையில் பள்ளிக்கட்டடம்! அச்சத்தில் மாணவர்கள்; கண்டுகொள்வாரா கலெக்டர்?

ஒருநாள் பெய்த கனமழையிலேயே, தர்மதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தின் சுவர் மற்றும் கட்டடத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருக்கிறது. இதனால் மாணவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்திலுள்ள தர்மதானபுரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கட்டப்பட்டிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டடம், 2016-2017-ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி நிதியிலிருந்து 10 லட்சமும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 12 லட்சமுமாக, மொத்தம் 22 லட்சம் நிதி  ஒதுக்கீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளி, கட்டிய சில மாதங்களிலே பெய்த கனமழையின் காரணமாக சுவர் மற்றும் கட்டடத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் ஆகியவை மழை நீரில் கரைந்திருக்கின்றன. ஊர் பொதுமக்கள் சென்று பார்த்தபோது, பள்ளிக் கட்டடம் மழை நீரில் கரைந்து, தூணின் உள்பக்கம் கம்பி வெளியே தெரிந்திருக்கிறது. இதையடுத்து, தரமற்ற பள்ளிக் கட்டடத்தை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஊர் பொதுமக்களிடமும், அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களிடமும் விசாரித்தபோது, பள்ளிக் கட்டடம் கட்டும்போது ஆற்று மணல் கிடைக்கவில்லை என்பதால், செங்கல் சூளையில் இருந்து வரும் சவுட்டு மணலைக் கலந்து கட்டியதால்தான் ஒரு மழைக்குக்கூட தாங்காமல் கட்டடம் கரைந்திருக்கிறது என்பது தெரியவந்தது.

"இந்த ஸ்கூல் கட்டுறப்போ ரெண்டு தடவை கலெக்டர் வந்து பார்த்தார். இருந்தாலும் ஸ்கூல் இந்த நிலைமையிலதான் இருக்கு. இப்பவும் கலெக்டர் ஆய்வு செஞ்சிட்டுபோன பிறகு, கட்டடத்தின் மேல் பூச்சுதான் சரியில்லைனு கட்டடத்தை சிமென்ட் வச்சு பூசுனாங்க. இருந்தாலும், தரமற்ற இந்தப் பள்ளிக்கூடம் மாணவர்கள் உயிரை என்னைக்கு வேண்டுமானாலும் பலி கேக்கும். அதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுசெஞ்சு, பள்ளிக் கட்டடத்தைச் சீர் செய்ய வேண்டும்" என்கிறார், அந்த ஊரைச் சார்ந்த மகேந்திரன்.

சவுட்டு மணல் கொண்டு கட்டிய இந்த பள்ளிக் கட்டடம் முழுவதுமாக ஆய்வுசெய்யாமல், மேல் பூச்சு மட்டும் பூசி மழுப்பினால், இனி வரும் காலங்களில் பெய்யும் மழை காரணமாக இடிந்து விழுந்து பல மாணவர்களைப் பலி வாங்கும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அச்சத்தைப் போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமா?