``கடிதம் அனுப்பி அவமரியாதைசெய்கிறார் முதல்வர் நாராயணசாமி''- கிரண்பேடி வேதனை!

”முதல்வர் நாராயணசாமி அவமரியாதை செய்கிறார்” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

கிரண்பேடி

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகார மோதல் நிலவிவருகிறது. கடந்த 5-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்படுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட அவருக்கு அதிகாரமில்லை. அதனால், அவரின் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றத் தேவையில்லை” என்று அதிரடியாகத் தெரிவிக்க, ”ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். அவர்களின் செயல்திறன் அறிக்கைமீது இறுதி முடிவை நான்தான் எடுக்க வேண்டும்” என்று மறுநாளே வாட்ஸ்அப்பில் கொதித்தெழுந்தார் கிரண்பேடி.

நாராயணசாமி

ஆளுநர் கிரண்பேடியின் அந்தக் கருத்துக்குப் பதில் கொடுக்கும் விதமாக, இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமி கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், ”அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் நிர்வாகி (யூனியன் பிரதேசமான புதுச்சேரியைப் பொறுத்தவரை ஆளுநர் என்பவரே நிர்வாகி) செயல்பட வேண்டும் என்றும், தன்னிச்சையாகச் செயல்பட அவருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்ததோடு, யூனியன் பிரதேசங்களில் அமைச்சரவையின் முடிவே இறுதியானது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மேற்கோள் காட்டியிருந்தார் அவர். அந்தக் கடிதத்தை திருப்பி அனுப்பிவிட்டதாக நேற்று இரவு தனது வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்த கிரண்பேடி, “எனக்கு அனுப்பிய கடிதம்குறித்து முதல்வர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாகக் கேள்விப்பட்டேன். அந்தக் கடிதத்தைத் திருப்பி அனுப்பிவிட்டேன். அந்தக் கடிதம் மிகவும் அவமரியாதையாக இருந்தது. அப்படியான பல கடிதங்களை எனக்கு தொடர்ந்து அனுப்புவதை முதல்வர் நாராயணசாமி வழக்கமாகக்கொண்டிருக்கிறார். அப்படியான கடிதங்கள், முதல்வர் அலுவலகத்தின் பொறுப்புகளைத் தரம் தாழ்த்துகிறது என்ற தகவலை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!