வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (13/08/2018)

கடைசி தொடர்பு:13:25 (13/08/2018)

`குவாரியால் எங்கள் வாழ்வாதாரமே அழிந்துவிடும்'- உயர் நீதிமன்றக் குழுவிடம் கண்ணீர்விட்ட மக்கள்

"கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால், எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படும். எனவே, குவாரி அமைக்கக் கூடாது" என்று உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவிடம் பொதுமக்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

உயர் நீதிமனத்தால் அமைக்கப்பட்ட குழு ஆய்வு

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அப்பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டத்துக்கு செவிசாய்க்காத தமிழக அரசு, மணல் குவாரி அமைக்க ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக் குழு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதால் ஏற்படும் பிரச்னைகள்குறித்து ஆய்வுசெய்ய அருண் தம்புராஜ் தலைமையில் குழுவை அமைத்து, ஆய்வுசெய்து அறிக்கை தர உத்தரவிட்டது. 

                                             கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு நடத்தும் குழு

இதையடுத்து, அருண்தம்புராஜ் தலைமையில் குழுவினர் கொள்ளிடம் ஆற்றில் ஆய்வுப் பணிகளைச் செய்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றிலிருந்து செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள், சாகுபடி வயல்களின் நிலை, நீராதாரம், நிலத்தடி நீர் மட்டம் ஆகியவைகுறித்து ஆய்வுசெய்த குழுவினர், மணல் குவாரி அமைப்பதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது, மணல் குவாரி அமைக்கப்பட்டால் 8 மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் குடிநீர் திட்டம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயம் அழிந்து குடிநீர் பிரச்னை ஏற்படுவதோடு, எங்கள் வாழ்வாதாரமே அழிந்துவிடும். எனவே, மணல் குவாரி அமைக்கக் கூடாது என பொதுமக்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கண்ணீர் மல்க கூறினர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய ஆய்வுக் குழுவினர், "ஆய்வுகுறித்து அறிக்கை தயார்செய்து உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும்" என்று கூறினர்.