முகநூலில் முதல்வருக்கு கொலை மிரட்டல்! - திருப்பூர் தி.மு.க பிரமுகர் கைது

தி.மு.க  பிரமுகர்

முகநூலில் தமிழக முதல்வர் மற்றும்  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, திருப்பூரைச் சேர்ந்த தி.மு.க தொண்டர், காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, அவரது உடலை அடக்கம்செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரும் கருணாநிதியின் உடலுக்கு மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். மேலும், முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் அதுகுறித்து விவாதங்கள் நடைபெற்றன. அந்த வகையில் தி.மு.க-வின் அடிப்படைத் தொண்டர்கள் பலரும் கொதிப்பான மனநிலையிலேயே இருந்தனர். பின்னர், நீதிமன்றம் சென்ற திமுக, கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வாங்கியது. இதையடுத்து, ராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அடக்கம்செய்யப்பட்டது.

இந்த நிலையில், கருணாநிதி மறைந்த தருணத்தில், திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க தொண்டர் ராசுக்குட்டி என்பவர், தன்னுடைய முகநூல் பக்கத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்தும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியிலும், தன் ஆதங்கத்தைப் பதிவுசெய்திருந்தார். அந்தப் பதிவைக் கண்ட  அதேபகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் கணேசன் என்பவர், ராசுகுட்டி மீது திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராசுக்குட்டியை தற்போது கைதுசெய்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!