எழுத்தாளர் தொ.பரமசிவன் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்!

வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான தொ.பரமசிவன் மனைவியிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் 10 சவரன் நகையைப் பறித்துச் சென்றனர்.

தொ.பரமசிவன் மனைவியிடம் நகைபறிப்பு

நெல்லை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில், தனியாக சாலையில் நடந்து செல்லும் பெண்களைக் குறிவைத்து பைக்கில் வரும் மர்ம நபர்கள் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் அந்த நபர்களைப் பிடிக்க காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபடுவதுடன், ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனாலும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. 

இந்த நிலையில், பாளையங்கோட்டை தெற்குபஜார் பகுதியில் வசிக்கும் எழுத்தாளர் தொ.பரமசிவனின் மனைவியிடம் நகைக் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அவரது வீட்டு அருகில் உள்ள அடிபம்பில் அவரின் மனைவி இசக்கியம்மாள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் திடீரென அவரின் கழுத்தில் கிடந்த 10 சவரன் நகைகளை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்கள் குறித்த அடையாளம் தெரியவில்லை. இது குறித்து பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் நடந்த இந்தத் துணிகரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்க, அந்தப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டு வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!