வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (13/08/2018)

கடைசி தொடர்பு:14:24 (13/08/2018)

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள்கள் எங்கே?- ஆதாரங்கள் அழிக்கப்பட்ட பின்னணி

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா மீது இன்னொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, பதிவாளர் கணேசன் மற்றும் முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது துணைவேந்தர் சூரப்பா கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். மறுகூட்டல் விவகாரத்தில் உமாவுக்கு மூளையாக இருந்து உதவிய தொழிலதிபர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மறுகூட்டல் விவகாரத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,  ``லஞ்ச ஒழிப்பு போலீஸார், 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த மறுகூட்டல் விவகாரம் தொடர்பாக மட்டுமே விசாரித்துவருகின்றனர். அதன்பேரில்தான் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செமஸ்டரில் மட்டுமே 400 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தெரிகிறது. உமா, பணியாற்றிய காலங்களில் நடந்த தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகச் சந்தேகிக்கிறோம். ஆனால், அந்த முறைகேடுகளை யாராலும் இனிமேல் கண்டுபிடிக்க முடியாது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தேர்வின் விடைத்தாள்கள் மூன்றாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். ஆனால், உமா, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக பணியாற்றியபோது, ஆறு மாதங்கள் மட்டுமே விடைத்தாள்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் போதும் என்று உத்தரவிட்டார். அதன்படி 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்த விடைத்தாள்களை மட்டுமே முறைகேடுகளுக்கு ஆதாரமாக உள்ளன. மற்ற செமஸ்டர் விடைத்தாள்கள் எல்லாம் பல்கலைக்கழகத்தில் இல்லை. இதனால் அந்த செமஸ்டரில் முறைகேடு நடந்திருந்தாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது" என்றனர். 

உமா

பதிவாளர் கணேசன் அலுவலகத்தில் அடிக்கடி தொழிலதிபர் ஒருவர் வருவதுண்டு. அவர்தான் முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது தனக்கும் முறைகேடுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சம்பந்தப்பட்ட தொழிலதிபர் குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்டதாக தொழிலதிபரும் சினிமா பிரமுகருமான ஒருவர் மீது எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அவர்தான் ஏஜென்ட்டாக செயல்பட்டுள்ளார். அவர் குறித்த தகவல்களைச் சேகரித்துள்ளோம். வழக்கமாக மதிப்பெண் சான்றிதழ்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே அச்சடிக்கப்படும். ஆனால், 20 ஆண்டுகளுக்குத் தேவையான மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் ஒரு தளம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. அதைக் குறிப்பிட்ட ஆண்டுக்குப்பிறகு பயன்படுத்த முடியாது. இதனால், பல்கலைக்கழகத்துக்குத்தான் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களை அச்சடிக்க ஒப்பந்தம் கொடுத்தது தொழிலதிபரும், சினிமா பிரமுகருக்குச் சொந்தமான நிறுவனம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் மதிப்பெண் சான்றிதழ் அச்சடித்த விவகாரத்தில் தொழிலதிபர் எங்களிடம் சிக்குவார் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்னொரு முறைகேடும் சத்தமில்லாமல் நடந்துள்ளது. அதாவது, வெளிநாடுகளில் படிக்கச் செல்ல விரும்பும் மாணவர்களிடம்தான் இந்த முறைகேடு நடந்துள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். இந்த முறைகேட்டிலும் ஏஜென்ட்டாக இருந்துள்ளார் அந்த சினிமா பிரமுகர். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.