600 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு..! அனில் அகர்வாலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு வேதாந்தா நிர்வாகம் தரப்பில் தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், 620 கோடி ரூபாய் தலைமை நீதிபதி நிவாரண நிதியில் செலுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புனரமைப்புப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த விஜய் நிவாஸ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அதிகபட்சமாக பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் உள்ளதாக கண்டறியபட்டுள்ளது. இந்த ஆலைக்கு எதிராக ஆலையை மூடக்கோரி 99 நாள்கள் போராட்டம் முடிந்து 100-வது நாள் போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 150 நபர்களுக்கு மேல் காயமடைந்தனர்.
 

போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தத் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 கோடி ரூபாய் இழப்பீடாக வேதாந்த நிர்வாகம் வழங்க வேண்டும். மேலும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 620 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இந்த 620 கோடி ரூபாய் பணத்தை தலைமை நீதிபதியின் நிவாரண நிதியில் வழங்கி அந்தப் பணத்தை ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது  ``ஸ்டெர்லைட் நிறுவனத் தலைவர் அனில் அகர்வால், மத்திய சுற்றுச்சூழல் துறைச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து' நீதிபதிகன் சுந்தரேஷ், சதீஷ்குமார் உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!