வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (13/08/2018)

கடைசி தொடர்பு:15:19 (13/08/2018)

`ஏ.சி என்ன கமிஷனரிடமே பேசிக்கொள்கிறேன்' - நடுரோட்டில் போலீஸை கலங்கடித்த அ.தி.மு.க நிர்வாகி

``கமிஷனர் என் நண்பர்தான், அவர் கிட்ட பேசிக்கிறேன்'' என அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, அடைந்த அமைதி ஊர்வலத்தின்போது போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க பேரணி

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, நேற்று மாலை தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ தலைமையில், எம்.பி திருச்சி சிவா, எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர்கள் ஜவகர், கலை, கோவிந்தராஜ், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச்  செயலாளர் அருள், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், த.மு.மு.க உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி தில்லைநகர் 5 வது குறுக்குத் தெருவிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், சாஸ்திரி சாலை, கரூர் பைபாஸ் சாலை வழியாக அண்ணா சிலையை அடைந்ததும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர், கருணாநிதி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஊர்வலம் அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தபோது அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலைச் சரி செய்வதற்காகத் திருச்சி அண்ணா சிலை அருகே போலீஸார் போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தனர். அப்போது அ.தி.மு.க கொடி கட்டிய இனோவா காரில் வந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், போலீஸார் ரோப் கயிற்றைப் பார்த்ததும் காரிலிருந்து இறங்கிய அவர், வேக வேகமாக அந்தக் கயிற்றை அவிழ்த்தார். அதைப் பார்த்த போலீஸார், கயிற்றை ஏன்  அவிழ்க்கிறீங்க. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, கயிறு கட்டினால், ஆளுங்கட்சிக்காரங்கன்னா அதை அவிழ்ப்பீங்களா?  ஏ.சி.சார் சொல்லிதான் கட்டியிருக்கிறோம் எனக் குரல் கொடுத்தார். அடுத்து அந்த அ.தி.மு.க பிரமுகர், `ஆளுங்கட்சிக்காரர்களிடம் விளையாடுறீங்களா, நான் ஏன் பக்கத்தில் போறதுக்கு இவ்வளவு தூரம் சுத்திப்போகணும்' என்கிறார். `ஏ.சி என்ன கமிஷனரிடமே பேசிக்கொள்கிறேன். அவர் என் நண்பர்தான்' என வாக்குவாதம் செய்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் ஏ.சி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஞானசேகர் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர், போலீஸார் அவரை அங்கிருந்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் அதிமுக நிர்வாகி

இந்நிலையில், ‘போக்குவரத்து நெரிசலுக்காகப் போடப்பட்ட கயிற்றை அவிழ்த்த அந்த நபர் பெயர் ஸ்ரீரங்கம் திலக் என்பதும், இவர் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் இருந்ததாகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தபோது தினகரன் அணிக்குச் சென்றவர். தற்போது அ.தி.மு.க எடப்பாடி அணிக்கு மாறியுள்ளதாகவும், இவருக்குக் கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படாத நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக நடத்தப்பட்ட அமைதிப் பேரணியின்போது பிரபலமாக வேண்டும் என்று, தனி ஆளாகச் சென்று இப்படி வேண்டும் என்றே பிரச்னை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்து திலக்கை தொடர்புகொண்டுக் கேட்டோம். 'நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவசரமாக அப்போலோ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதால், வேகமாகச் சென்றபோது, எனது காரில் இருந்த கொடி, அங்கு கட்டியிருந்த கறுப்புக் கயிற்றில் மாட்டிக்கொண்டது. கயிறு மெல்லியதாக இருந்ததால்,சரியா தெரியல. எனது சூழலைச் சொன்னதும், அங்கிருந்த போலீஸார், கயிற்றை எடுத்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்கள். அதனடிப்படையில் நான் கயிற்றை அவிழ்க்கும்போது, நிலைமை தெரியாத ஒரு போலீஸார் என்னைத் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு, அங்கு வந்த ஏ.சி, இன்ஸ்பெக்டர்கள், அந்த இடத்தில் பத்திரிகையாளர்கள் நிறைய பேர் இருந்ததால் பிரச்னையாகும் எனப் பயந்தோம் என்றபடி என் சூழலைப் புரிந்துகொண்டு அனுப்பிவிட்டார்கள். நான் அணிகள் பிரிந்தபோது, அந்த அணிக்குச் சென்றது உண்மைதான். ஆனால், அதன் பிறகு தாய்க்கழகத்தில் இணைந்து மாவட்டச் செயலாளர் எம்.பி.குமாரின் கீழ் கட்சிப் பணிகளை செய்து வருகிறேன். போலீஸ்காரர்கள் என்னை போகச் சொல்லிவிட்டு, நடந்த அனைத்தையும் மறைத்துவிட்டு நான் கயிற்றை அவிழ்க்கும் வீடியோவை மட்டும் பரப்பிவருகிறார்கள்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க