வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (13/08/2018)

கடைசி தொடர்பு:15:50 (13/08/2018)

மெரினாவிலிருந்து நினைவிடங்களை அகற்ற உத்தரவிடுங்கள்..! உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி மீண்டும் முறையீடு

தலைவர்கள் நினைவிடங்களை மெரினா கடற்கரையிலிருந்து அகற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரிகளிடம் முறையிடுங்கள் என்று உயர் நீதிமன்றம் டிராபிக் ராமசாமிக்கு அறிவுறுத்தியுள்ளது.

டிராபிக் ராமசாமி

மெரினா கடற்கரையிலுள்ள தலைவர்களின் நினைவிடங்களை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி துரைசாமி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதிட்ட டிராபிக் ராமசாமி, 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலை மெரினா கடற்கரையில், கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்ட பகுதியில் அடக்கம் செய்ததை எதிர்த்தும், அங்குள்ள மறைந்த முதமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் நினைவிடங்களை கிண்டிக்கு மாற்ற வேண்டும் என்றும் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தேன். இந்த நிலையில், கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் என்னுடைய வழக்கை, என்னுடைய வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தும் தள்ளுபடி செய்தது. அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, 'இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரிகளிடம் முறையிடுங்கள்' என்று தெரிவித்தார்.