சின்னசாமிக்கு கல்தா கொடுத்த ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் - கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? 

முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி

அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்தவர் சின்னசாமி. முன்னாள் எம்.எல்.ஏ-வான சின்னசாமியைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``அரசுப் போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகி சின்னசாமி மீது போலீஸில் முறைகேடு புகார் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணைக்காக அவரை கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள  வீட்டிலிருந்து அழைத்துவந்தோம். அவர் மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். அவரைக் கைதுசெய்துள்ளோம். தேவைப்பட்டால் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிப்போம்" என்றனர். 

சின்னசாமி தரப்பில் பேசியவர்கள், ``அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாகச் சின்னசாமி மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கத்தில் கடும் குழப்பம் நிலவியது. சின்னசாமி ஆதரவு கோஷ்டியினருக்கும் எதிர்ப்பு கோஷ்டியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் தொழிற்சங்க முக்கிய நிர்வாகி கடுமையாகத் தாக்கப்பட்டார். இதையடுத்து சின்னசாமியைப் பதவியிலிருந்து கட்சித் தலைமை நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் சில காலம் அரசியலில் ஈடுபடாமல் அமைதியாக இருந்தார். டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து செயல்பட்டார். இதனால்தான் முறைகேடு குறித்து புகார் கொடுத்துள்ளனர். சட்டப்படி அதை எதிர்கொள்வோம். எங்களிடமும் ஆதாரங்கள் உள்ளன. தேவைப்படும்போது அதை வெளியிடுவோம்" என்றனர். 

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ``சின்னசாமியின் நடவடிக்கைகளால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அப்போது சங்கத்தின் வரவு, செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போதுதான் 6 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக எங்களுக்குத் தெரியவந்தது. அதுதொடர்பாகத்தான் புகார் கொடுத்தோம். அதன்பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை" என்றனர். 

முன்னாள் அமைச்சருக்குக் குடைச்சல்? 

அண்ணா தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி, கடந்த பிப்ரவரியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரை போலீஸார் கைது செய்ததும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் இன்று கட்சித் தலைமை நீக்கியுள்ளது. டி.டி.வி.தினகரன் கட்சியில் இணைந்தபோதுகூட உடனடியாக இந்த நடவடிக்கையை அ.தி.மு.க எடுக்கவில்லை. ஆனால், அவர் கைது செய்யப்பட்டதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சின்னசாமியை வைத்து டி.டி.வி.தினகரன் கட்சியிலிருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு குடைச்சல் கொடுக்கவும் ஆளுங்கட்சியினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!