`அது கலைஞரின் முடிவு' - அழகிரிக்குப் பதிலடி கொடுத்த ஜெ.அன்பழகன்! 

``அழகிரியைக் கட்சியிலிருந்து நீக்கிய முடிவு இப்போது இருக்கிறவர்கள் எடுக்கவில்லை. தலைவர் இருக்கும்போது எடுத்தது'' என தி.மு.க., எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

 ஜெ அன்பழகன்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் அவரின் மகன் மு.க.அழகிரி குடும்பத்தினருடன் சென்று இன்று அஞ்சலி  செலுத்தினார். அஞ்சலிக்குப் பின் பேசிய அழகிரி, ``நான் தற்போது தி.மு.க-வில் இல்லை. ஆனால், உண்மையான தி.மு.க விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கமே இருக்கிறார்கள். கட்சித் தொடர்பான என்னுடைய ஆதங்கத்துக்குக் காலம் பதில் சொல்லும்" எனக் கூறினார். நாளை தி.மு.க செயற்குழு நடக்கவுள்ள நிலையில், அழகிரியின் கருத்து கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க., எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அழகிரியின் கருத்துக்குப் பதிலளித்துள்ளார். 

அதில், ``கருணாநிதி மறைவில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. அழகிரி தற்போது கட்சியில் இல்லை. அவரது கருத்துக்குப் பதில் சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. அவரைக் கட்சியை விட்டு நீக்கிய முடிவு இப்போது இருக்கக்கூடியவர்கள் எடுத்ததல்ல. தலைவர் கலைஞர் இருக்கும்போதே அவர் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர். கட்சிக்காரர்கள் யாரும் அவருடன் தொடர்பில் இல்லை. தொடர்ந்து கட்டுக்கோப்பாக இருக்கிறோம். எனினும் இவ்விவகாரத்தில் நாளை கூடும் செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் விரிவான பதில் கூறுவார்" எனத் தெரிவித்தார். ஒட்டுமொத்தத்தில் அழகிரியின் கருத்தால் தி.மு.க-வுக்குள் மீண்டும் புகைச்சல் உண்டாகியுள்ளது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!