பெரியார் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் பதவிக்கு 3 பேர் கடும் போட்டி!

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருப்பவர் மணிவண்ணன். அவருடைய பதவி வரும் 17-ம் தேதியோடு நிறைவு பெற உள்ளது. தற்போது அந்தப் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. பதிவாளர் நியமிக்கும் வரை பொறுப்பு பதிவாளராகப் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களையே நியமிக்கப்படுவார்கள். இந்தப் பொறுப்பு பதவிக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பலரும் காய் நகர்த்தி வருகிறார்கள். யாருக்கு அந்த பொறுப்பு பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களிடம் பேசியபோது, ``பல்கலைக்கழகத்தில் துணைவேந்தருக்கு அடுத்தபடியாக இருப்பவர் பதிவாளர். இவரே பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துக் கோப்புகளிலும் அதிகாரபூர்வமாக கையெழுத்துப் போட்டு அங்கீகாரம் அளிப்பார். இவர் கையெழுத்துப் போடவில்லை என்றால் துணைவேந்தர் எந்தத் திட்டத்தையும் நகர்த்த முடியாது. இப்படிப்பட்ட உயர்ந்த பதவிக்கு எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காதவர்கள் வர வேண்டும். தற்போதுள்ள பதிவாளர் மணிவண்ணன் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. உதாரணமாக, பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலைக் கடிதத்தில் இவரைக் குற்றவாளியாக குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் பணி நியமனக் கோப்புகள் காணாமல் போனதாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மணிவண்ணன் நிதி அலுவலராக பொறுப்பில் இருந்தபோது முறைகேடாக பல ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டன. சுவாமிநாதன் துணைவேந்தராக இருந்தபோது தகுதி இல்லாதவர்களுக்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பணி நியமனம் வழங்கினார் என்பது தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கோப்புகளில் இவர் கையெழுத்துப் போட்டுள்ளார். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லாதவர்கள் இந்தப் பதவிக்கு வர வேண்டும். ஆனால், பதிவாளர் பொறுப்புக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்துறைத் தலைவர் பெரியசாமி, டீன் கிருஷ்ணகுமார், கணினி அறிவியல் துறை பேராசிரியர் தங்கவேலு ஆகியோர் காய் நகர்த்தி வருகிறார்கள். இவர்கள் அனைவர் மீது பல சர்ச்சைகள் இருக்கிறது'' என்றார்கள்.

இதுபற்றி பதிவாளர் மணிவண்ணனிடம் பேச முயற்சி செய்தோம். பல்கலைக்கழக பி.ஆர்.ஓ., ``சார் சென்னையில் ஒரு மீட்டிங்கில் இருப்பதால் பேச முடியாது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!