வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (13/08/2018)

கடைசி தொடர்பு:11:20 (14/08/2018)

அடுத்தகட்ட ஆலோசனையில் அழகிரி! - புதிய கட்சி உதயமாகுமா?

அழகிரி

சென்னையில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் அழகிரி. ' கட்சிக்குள் இணைவது குறித்து தி.மு.க தலைமை உரிய முடிவெடுக்கும் என அவர் நம்புகிறார். அப்படி எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்பார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

சென்னை, மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மாலை வைத்த கையோடு, ஸ்டாலினுக்கு எதிராகப் பேட்டி அளித்தார் அழகிரி. அவரது கருத்துக்குப் பதில் அளித்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், 'நாங்கள் ஒற்றுமையாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறோம்' என்றார். மெரினாவில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அழகிரி, அங்கு தயாளு அம்மாளைச் சந்தித்துவிட்டு புறப்பட்டார். இதன்பிறகு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசும் அழகிரி தரப்பினர், 'அனைவரையும் அமைதியாக இருக்கும்படி அழகிரி தெரிவித்துள்ளார். கருணாநிதி உயிரோடு இருந்த சமயத்திலேயே அழகிரியை நீக்கிவிட்டதாகத் தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கோபாலபுரத்தில் என்ன நடந்தது என்று தெரியாது. எதற்காக அழகிரி அமைதியாக இருந்தார் என்ற காரணமும் புரியாது. எத்தனையோ இக்கட்டான நேரங்களில் தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் சென்றவர் கருணாநிதி. ஆனால், அவரின் மறைவுக்குப்பிறகும் தி.மு.க.வை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அழகிரியின் நோக்கம். தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்குப் பிறகு அடுத்தகட்ட நிலைப்பாட்டை எடுப்போம். தேவைப்பட்டால் கலைஞர் பெயரில் புதிய கட்சியைக்கூட தொடங்குவோம்" என்கின்றனர்.