``உழைப்புதான் அம்மாவை 100 வயசு வரைக்கும் வாழவச்சிருக்கு"- நெகிழும் மகள்!

சுப்புலெட்சுமிக்கு தற்பொழுது 100 வயது ஆகியுள்ளது. ஆனாலும் அவர் நல்ல ஆரோக்கியமாக உள்ளார். காலையில் 5 மணிக்கு எழுந்து குளித்து அனைத்து வேலைகளையும் எவர் உதவியும் இல்லாமல் அவரே செய்துகொள்கிறார். கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்கிறார். நாட்டு நடப்புகளை நன்கு தெரிந்துவைத்துள்ளார்.

``உழைப்புதான் அம்மாவை 100 வயசு வரைக்கும் வாழவச்சிருக்கு

நூறு வயது வரை வாழ்வதெல்லாம் வரம் தான். அந்த வரம் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. சுப்புலெட்சுமி அப்படியான வரம் பெற்று வந்த பெண்மணி. 100 வயதை நிறைவுசெய்த சுப்புலெட்சுமிக்கு, குடும்பத்தினர் கூடி,  பெரிய மண்டபம் பிடித்து சொந்த பந்தங்கள், ஊர்மக்களையெல்லாம் அழைத்து பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 

100 வயசு சுப்புலெட்சுமி பாட்டி

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியர் பரமசிவத்தின் மனைவிதான் இந்த சுப்புலெட்சுமி. பரமசிவம் - சுப்புலெட்சுமி தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள். இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். பரமசிவம் 40 ஆண்டுகளுக்கு முன்பே உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். சுப்புலெட்சுமிதான் தனி ஆளாக நின்று பிள்ளைகளை வளர்த்தெடுத்துள்ளார். கடும் உழைப்பாளி. மகன் தர்மராஜன் நாகை மாவட்டம்,  கொள்ளுமாங்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்னொரு மகன் ராஜன் இறந்துவிட்டார். கோமதி, சந்திரா ஆகிய இரண்டு மகள்களும் விருத்தாசலத்தில் வசிக்கிறார்கள். இன்னொரு மகள் சத்யபாமா திருச்சியில் வசித்து வருகிறார். சுப்புலெட்சுமி இப்போது விருத்தாசலத்தில் இரண்டு மகள்கள் வீட்டிலும் மாறி மாறித் தங்கியிருக்கிறார்.  

100 வயதிலும் சுப்புலெட்சுமி ஆரோக்கியமாக இருக்கிறார். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் கண் விழிக்கும் அவர் காலைக்கடன்களை எல்லாம் முடித்துவிட்டு அனைத்து வேலைகளையும் எவரது உதவியும் இல்லாமல் ஒற்றை மனுஷியாகச் செய்துவிடுவார். கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்கிறார். நாட்டு நடப்புகளை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளார். 9 பேரன், 4 பேத்தி, 16 கொள்ளுப் பேரன்களோடு சிறுபிள்ளைபோல விளையாடிப் பொழுதைக் களிக்கிறார்.  

சுப்புலெட்சுமி

சுப்புலெட்சுமி பாட்டியின் பிறந்தநாளில் அவரது தாய்வழி சொந்தங்கள், அவரது கணவர் பரமசிவம் வழி சொந்தங்கள், மகன், மகள் வழி சொந்தங்கள், பேரன், பேத்திகள் என ஒட்டுமொத்த உறவினர்களும் கலந்துகொண்டார்கள். கொண்டாட்டத்துக்கு மத்தியில், பேரன் பேத்திகள் அருகில் நிற்க, சுப்புலெட்சுமி கேக் வெட்டிக் கொண்டாடினார். தொடர்ந்து விருந்தும் வழங்கப்பட்டது. மகன், மகள், பேரன்கள் உறவினர்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் நின்று, பாட்டியிடம் ஆசிபெற்றனர். 

கொண்டாட்ட மனநிலையில் இருந்த சுப்புலெட்சுமியிடம் பேசினோம். 

``உறவுகளையெல்லாம் ஒரே இடத்துல பார்க்கிறதுக்கு சந்தோஷமா இருக்கு. இவ்வளவு ஆயுளை இறைவன் கொடுத்ததுக்கு நன்றி. வாழ்க்கையில நல்லது, கெட்டது, சந்தோஷம், சோகம் எல்லாத்தையும் அனுபவிச்சுட்டேன். நல்ல உணவு சாப்பிட்டு, நல்லாத் தூங்கி எழுந்திருச்சா எல்லோருக்கும் ஆயுள் கூடும். இப்பவும் நான் காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திருச்சிருவேன்.  புள்ளைங்க எல்லாம் அன்பைக் கொட்டுதுங்க. வாழ்க்கை ரொம்ப நிறைவா இருக்கு..." என்று கையெடுத்து வணங்குகிறார். 

சுப்புலெட்சுமி

சுப்புலெட்சுமி பற்றி அவரின் மகள்கள் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டனர். 

``அம்மா சைவ உணவு மட்டும்தான் சாப்பிடுவாங்க. பல்லெல்லாம் கொட்டிடுச்சு. குழைவான உணவாத்தான் கொடுக்கிறோம். சைவத்துல என்ன செஞ்சாலும் சாப்பிடுவாங்க. இன்னைக்கு வரைக்கும் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம்னு எந்த நோயும் அவங்களுக்கு வந்ததில்லை.  அவங்களுக்கான எந்த வேலையையும் மத்தவங்களைச் செய்யவிடமாட்டாங்க. நூறு வயசுவரை அம்மா நோய் நொடியில்லாம இருக்காங்கன்னா அவங்களோட உழைப்புதான் காரணம்.

அவங்க துணிமணிகளை யாரையும் துவைக்கவிட மாட்டாங்க. அவங்களே எல்லாத்துணிகளையும் துவைச்சுக்குவாங்க. காலையில எழுந்தவுடனே முதல்வேலையா குளிச்சிடுவாங்க. ரொம்ப நேரம் சாமி குடும்பிடுவாங்க. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேரன் பேத்திகளோட விளையாடுவாங்க. சுத்திலும் பேரப்பிள்ளைங்களை உக்கார வச்சுக்கிட்டுக் கதை சொல்வாங்க. குடும்பத்துல  ஏதாவது பிரச்னைகள் வந்தா சம்பந்தப்பட்டவங்களைக் கூப்பிட்டு புத்திமதி சொல்வாங்க.  லீவு விட்டா எல்லாப் பிள்ளைகளும் எங்க வீட்டுலதான் இருக்கும்'' என்றார்கள் பெருமிதத்துடன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!