`2019-ல் கூட உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கமாட்டீர்கள்!' - நீதிபதிகள் அதிருப்தி

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது 2019-ல் கூட உள்ளாட்சித்  தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் போல தெரிகிறது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உள்ளாட்சிதேர்தலை


2017 நவம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை அமல்படுத்தாத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வார்டு மறுவரையறை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு தமிழக அரசு ஒப்புதல் பெற்று, அதன்பின் மூன்று மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார். மேலும், வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது எனவும், 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த அனுமதி அளிக்கும் சட்டப்பிரிவை அரசு ரத்து செய்துள்ளதால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் எந்த வார்டும் இல்லை என்றும் வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று தி.மு.க-தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆணையம் அறிக்கை அளித்தபின் எத்தனை நாள்களில் அரசு ஒப்புதல் அளிக்கும் எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தபின்தான் ஒப்புதலுக்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியும் எனத் தெரிவித்தார். ஏற்கெனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 2019-ல் கூட தேர்தலை நடத்தி முடிக்க மாட்டீர்கள் போல உள்ளது என தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பின் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!