வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (13/08/2018)

கடைசி தொடர்பு:19:37 (13/08/2018)

பயிர்களை பயமுறுத்தும் ஆர்மி வார்ம் பூச்சிகள்... இயற்கை முறையிலேயே தீர்வு உண்டு!

ட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் விவசாயப் பயிர்களை அச்சுறுத்தி வந்த ஃபால் ஆர்மி வார்ம் எனப்படும் பூச்சி வகை இந்தியாவுக்குள் நுழைந்து விவசாயிகளைப் பயமுறுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் ஜூலை மாதம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அந்த அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. "வட அமெரிக்காவில் மக்காச்சோளத்தைத் தாக்குகிற பூச்சியான ஃபால் ஆர்மிவார்ம்  என்னும் பூச்சியின் அறிவியல் பெயர் ஸ்போடாப்டிரா ஃப்ருகிபர்டா (Spodoptera frugiperda). இது வட அமெரிக்காவைச் சேர்ந்த பூச்சி வகையாகும். ஆப்பிரிக்காவில் 2016-ம் ஆண்டு முதல் இது பரவ ஆரம்பித்தது. அன்றிலிருந்து ஆப்பிரிக்க துணைக்கண்டத்தில் 30 கோடி மக்களின் பிரதான உணவுப் பயிரான சோளப் பயிரின் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டது.

ஆர்மி வார்ம் பூச்சி

ஆசியாவில் முதன்முறையாகக் கர்நாடகாவில் இந்தப் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் நடப்பாண்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சோளப் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் இருந்தது. இதனால் பயிர்களின் உற்பத்தியில் சீரற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பூச்சியானது சோளப் பயிரை மட்டும் தாக்காது. காய்கறி, நெல் மற்றும் கரும்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பயிர்களைத் தாக்கும் அபாயமும் இருக்கிறது. நாட்டின் இதர பகுதிகளுக்கும் அண்டை நாடுகளுக்கும்கூட இதன் பரவல் வெகு விரைவாக நடைபெறும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் முதலுக்கு மோசம்தான்.

இந்தியாவில் கர்நாடகாவை அடுத்து ஆந்திரப் பிரதேசம், தமிழகம்தான் இந்தப் பூச்சிகளின் தாக்குதலைச் சந்திக்க இருக்கிற மாநிலங்கள். அதனால் அந்த மாநிலங்களில் உள்ள வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் இந்தத் தாக்குதல் குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பயிர்களின் வித்தியாசமான பாதிப்பைக் கண்டால், அருகிலுள்ள வேளாண் அலுவலருக்குத் தகவல் தெரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாகக் கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பூச்சியியல்துறைத் தலைவர் முனைவர் முத்துகிருஷ்ணன் பேசும்போது, "கர்நாடகத்தில் இது தொடர்பான அறிக்கை வெளியானதுமே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இதற்கான சோதனைகளைத் தொடங்கிவிட்டோம். இங்கும் சோளப் பயிர்களில் இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனினும், ஒரு வார கால பரிசோதனைக்குப் பிறகுதான் இந்தப் பூச்சிகளின் இருப்பை உறுதிப்படுத்த முடியும். அவ்வாறு உறுதிசெய்யப்பட்டால், அவை வளரவிடாமல் தடுப்பதற்கான அனைத்து வழிகளும் இயற்கை முறையிலேயே உள்ளன. இயற்கை முறையில் இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. பூச்சிக்கொல்லிகளின் தேவை பெருமளவில் இருக்காது. அதனால், பூச்சிக்கொல்லிகளை வாங்கி தெளித்து விவசாயிகள் காசை கரியாக்கிக்கொள்ள வேண்டாம். இதோடு, ஆய்வின் முடிவில் இந்தப் பூச்சிகளின் இருப்பு உறுதிசெய்யப்பட்டால், அதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்து மாவட்ட வேளாண் அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும். இதைப் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் நம்மிடத்தில் உள்ளன. மேலும், தகவல்களுக்கு எங்கள் துறையை அணுகவும்" என்றார் உறுதியாக.

தொடர்புக்கு:

முத்துக்கிருஷ்ணன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண் பூச்சியியல் துறை,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,

கோயமுத்தூர்.

செல்போன் - 94862 57548


டிரெண்டிங் @ விகடன்