1-ம் நம்பர் ராசி; பொருளாளர் துரைமுருகன்?! - பொதுக்குழுவுக்கு நாள் குறித்த ஸ்டாலின்

1-ம் நம்பர் ராசி; பொருளாளர் துரைமுருகன்?! - பொதுக்குழுவுக்கு நாள் குறித்த ஸ்டாலின்

மு.க.அழகிரியின் ஆதங்கத்துக்கு தி.மு.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர்களே பதில் கூறி வருகின்றனர். 'பொதுக்குழுக் கூட்டத்தை வரும் செப்டம்பர் 1-ம் தேதி கூட்ட இருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். அதுவரையில் தொலைக்காட்சி விவாதங்களுக்குக்கூட யாரும் போகக் கூடாது எனக் கூறிவிட்டனர்' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

கருணாநிதி சமாதியில் அழகிரி

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதியில் மரியாதை செலுத்திவிட்டுப் பேசிய மு.க.அழகிரி, 'கருணாநிதியின் விசுவாசமிக்க தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்' எனக் கூறினார். அவரின் கருத்து தி.மு.க வட்டாரத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. 'நாங்கள் கட்டுக்கோப்போடு ஒற்றுமையாக இருக்கிறோம்' எனப் பதில் அளித்தார் தி.மு.க எம்.எல்.ஏ,. ஜெ.அன்பழகன். அழகிரியின் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய அறிவாலய நிர்வாகி ஒருவர், ``அழகிரி கட்சிக்குள் வந்துவிடுவாரா என்பது குறித்துக் கடந்த சில நாள்களாகவே குழப்பம் நீடித்து வந்தது. தற்போது, அதற்குத் தெளிவான விடை கிடைத்துவிட்டது. கட்சியின் பொருளாளர் பதவியைக் குறிவைத்து அழகிரியும் கனிமொழியும் காய் நகர்த்தி வந்தனர். 'தலைவரால் நீக்கப்பட்ட அழகிரியை மீண்டும் உள்ளே கொண்டு வந்தால், தன்னுடைய தலைமையை விமர்சிக்கத் தொடங்கிவிடுவார்கள்' என நினைத்த ஸ்டாலின், எந்த முடிவையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அழகிரியின் என்ட்ரிக்கும் தடை போட்டுவிட்டார். இதனால், 'மீண்டும் கட்சிக்குள் நுழைய வேண்டும்' என எதிர்பார்த்துக் காத்திருந்த அழகிரியின் நோக்கம் ஈடேறவில்லை" என விவரித்தவர், 

``நாளை நடக்கவிருக்கும் செயற்குழுவில், தலைவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. இதன்பிறகு, வரும் 1-ம் தேதி பொதுக்குழுவை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார் செயல் தலைவர். அவர் பிறந்த தேதி மார்ச் 1. எந்தவொரு காரியத்திலும் ஒன்றாம் நம்பரை ராசியாகப் பார்க்கிறார் ஸ்டாலின். அதன் அடிப்படையில், '1-ம் தேதி கட்சியின் தலைவராகப் பதவியேற்கலாம்' என்ற முடிவை எடுத்திருக்கிறார். அதேபோல், கட்சியின் பொருளாளர் பதவியை துரைமுருகனுக்குக் கொடுக்கும் முடிவில் இருக்கிறார். 'குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அந்தப் பதவியில் அமர வைத்தால் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும்' என்பதுதான் காரணம். பொதுக்குழுவுக்கு இன்னும் 17 நாள்கள் இருக்கின்றன. அதுவரையில், 'கழகத்தின் மாண்புகளைக் குலைக்கும் வகையில் யார் பேசினாலும், அதற்குப் பதில் கொடுக்கும் வகையில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கக் கூடாது' என நேற்றே அறிவுறுத்திவிட்டார் ஸ்டாலின். 'எத்தனையோ இன்னல்களைக் கடந்து இந்தக் கழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பாதையில் வரக்கூடிய தடைகளைத் தகர்ந்தெறிந்து முன்னேறுவோம்' என்பதுதான் அவருடைய கருத்தாக இருக்கிறது" என்றார் நிதானமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!