திருமுருகன் காந்தி மீது கூடுதலாக மூன்று வழக்குகள் பதிவு!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது கூடுதலாக மூன்று வழக்குகள் பதிவு செய்து மீண்டும் அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். 

திருமுருகன் காந்தி

தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், அதன் தொடர்ச்சியாக நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை தொடர்பானவற்றைச் சர்வதேச அளவில் தொடர்ந்து எடுத்துரைத்துவருகிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. அந்த வகையில், இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு தமிழகம் திரும்பிய அவரை பெங்களூரு விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வரப்பட்ட அவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறி அவரை விசாரிக்க போலீஸ் சார்பில் நீதிமன்ற காவல் கோரப்பட்டது. இதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, அவரிடம் விசாரணை நடத்த மட்டும் அனுமதித்தது. அதன்படி, விசாரணை முடித்து போலீஸ் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அவரை மீண்டும் போலீஸார் கைது செய்தனர். காரணம் கேட்டதற்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், அங்கு பேசியது தொடர்பாக தொடரப்பட்ட ராயப்பேட்டை காவல்நிலைய வழக்கைச் சுட்டிக்காட்டினர். 

இதன்பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தி, தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி மீது கூடுதலாக மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுகுறித்து கூறியுள்ள மே 17 இயக்கம், `` 2017ல் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு வெளியே வந்தபோது, புழல் சிறைக்கு வெளியே உள்ள பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்துப் பேசியதற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிலும் பிரிவு 124-A தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள். பழைய நிகழ்வுகளின் அடிப்படையில் மூன்று வழக்குகளைப் பதிவு செய்து வேலூர் சிறைக்குள்ளேயே மீண்டும் கைது செய்திருக்கிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பவம் மீண்டும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!