`அரசு மேல்முறையீடு செய்திருந்தால் கருணாநிதிக்காக நானே போராடியிருப்பேன்' - நினைவேந்தலில் ரஜினிகாந்த்!

தமிழ்த் திரையுலகினர் சார்பில் சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் திரையுலகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சினிமா தொழிலாளர் சம்மேளனம், நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன. அந்த வகையில் இன்று மாலை 6 மணி அளவில் சென்னை காமராஜர் அரங்கில் நினைவேந்தல் கூட்டம் தொடங்கியது. இதில் ரஜினி, மு.க.ஸ்டாலின்,  நாசர், ராதாரவி, விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, அம்பிகா, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரேவதி, தாணு, கே.டி.குஞ்சுமோன், சுஹாசினி, விஜயக்குமார் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனத் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பொன்வண்னன், `கருணாநிதியைக் கண்டு வியந்துள்ளேன். தி.மு.க அரசு கலைக்கப்பட்டபோதெல்லாம், அந்தத் தோல்விகளை மிகவும் இயல்பாக எதிர்கொண்டதைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளேன். பொன்னர்- சங்கரில் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த பாக்கியம். அவர் தன்னை அப்டேட் செய்துகொண்டார். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயணித்தார். தன் மீதான விமர்சனங்களைத் தைரியமாக எதிர்கொண்டார். எதிர்காலத்துக்குத் தேவையானதை வடிவமைத்தவர் கருணாநிதி' எனப் புகழாரம் சூட்டினார். நாசர், `படைப்பாளி, போராளி, எழுத்தாளர், பேச்சாளர் பன்முகத் தலைவர். அவரது மறைவு பெரும் இழப்பு. அவர் வடித்த கதாபாத்திரத்தில் நடித்தது எனது பாக்கியம். நாசர் என்று என்னை பெயர் கொண்டு அழைத்த நெருக்கம் எங்களுக்குள் இருந்தது. அவர் விட்டுப்போன பணிகளை நாம் மேற்கொள்வது அவருக்குச் செய்யும் மரியாதை' எனத் தெரிவித்தார்.

விஷால் பேசுகையில், `மாமனிதனுக்கு செலுத்த வேண்டிய மரியாதை. எத்தனை தலைமுறையானாலும் கலைஞர் என்ற பெயரை மறக்க முடியாது. பொதுப்பணி, கலை, இலக்கியமென எல்லாத் துறைகளிலும் அயராது உழைத்தவர். அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது. அவர் இளைஞர்களுக்கு ஓர் வழிகாட்டி. பல கவிதைகளையும் , நலத் திட்டங்களுக்கு உத்தரவளித்து எழுதிய அவரது பேனாவையும் நடிகர் சங்க கட்டடத்தில் வைத்து வரும் தலைமுறையினருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும். அவரின் குடும்பம் அதை தந்தருள வேண்டும்' என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த்

ராதாரவி, `தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு `கலைஞர்' என்ற பட்டத்தைக் கொடுத்தது என் தந்தையார் எம்.ஆர்.ராதா. எதிர்க்கட்சிக்காரர்கள்கூட கடைசி நேரத்தில் அவரை கலைஞர் என்று மரியாதையோடுதான் அவர் பெயரை உச்சரித்தார்கள். அது ஒரு மந்திரச்சொல். அவர் ஒரு சுயம்பு' என்று புகழாரம் சூட்டினார்.

ரஜினி, `கருணாநிதி இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுக்காலமாகக் கட்சியைக் கட்டிக்காத்தவர்.எத்தனையோ துரோகங்கள் வஞ்சனைகளை எதிர்கொண்டவர் கருணாநிதி. அ.தி.மு.க-வின் ஆண்டு விழாவில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தோடு தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். தமிழர்கள் யாரையும் மறக்கமாட்டார்கள் என்பதை கருணாநிதி மறைவின்போது உணர்ந்துகொண்டேன். அதைப் பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. என்னுடைய நண்பர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் இந்தியாவே வந்தது. அதில் ஒரு குறை. கவர்னரிலிருந்து எல்லாருமே வந்தனர்.

தமிழ்நாட்டின் முதலைமச்சர் அங்கு வர வேண்டாமா, அங்கு இருந்திருக்க வேண்டாமா? நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா, ஜெயலலிதாவா ஏன் போகவில்லை. தமிழக அமைச்சரவையே பங்கேற்க வேண்டாமா. மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். கடைசியில் ஸ்டாலின் குழந்தையைப்போல கண்ணீர்விட்டது என்னால் தாங்க முடியவில்லை. கருணாநிதிகூட நான் பல நாள்கள் செலவழித்தது எனக்கு சந்தோஷம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினி

நினைவேந்தல் நிகழ்வின் இறுதியாக தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!