நெல்லையில் ஸ்டாலின் பங்கேற்கும் கருணாநிதி நினைவு அஞ்சலிக் கூட்டம்! - ஏற்பாடுகள் தீவிரம் | DMK to organise Memorial Meeting in Nellai

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (13/08/2018)

கடைசி தொடர்பு:21:00 (13/08/2018)

நெல்லையில் ஸ்டாலின் பங்கேற்கும் கருணாநிதி நினைவு அஞ்சலிக் கூட்டம்! - ஏற்பாடுகள் தீவிரம்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நினைவைப் போற்றும் வகையில், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் புகழஞ்சலி பொதுக்கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கருணாநிதி

தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். மெரினாவில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கருணாநிதியின் மக்கள் நலத்திட்டங்களையும் சமூகத்துக்கு அவர் ஆற்றிய சேவைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் புகழஞ்சலி பொதுக்கூட்டங்களை நடத்திட தி.மு.க சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நெல்லையில் கருணாநிதியின் புகழஞ்சலிப் பொதுக்கூட்டம் வரும் 26-ம் தெதி நடைபெற உள்ளது. கட்சியின் செயல் தலைவரான ஸ்டாலின் இதில் கலந்துகொள்ள இருக்கிறார். அதனால் இந்தக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்திடும் வகையில், கட்சியின் மூத்த தலைவரான ஐ.பெரியசாமி நெல்லையில் முகாமிட்டு கூட்டம் நடக்க இருக்கும் இடம் உள்ளிட்டவற்றைத் தேர்வு செய்து ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார். 

இதனிடையே, மு.க.அழகிரி கலைஞரின் உண்மையான தொண்டர்கள் அனைவருமே தன்பக்கம் இருப்பதாகக் கருத்து தெரிவித்து இருக்கும் நிலையில் தென் மாவட்டத்தில் தி.மு.க கட்டுக்கோபாக இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் ஒட்டுமொத்த கட்சியினரும் ஸ்டாலின் பக்கமே இருக்கிரார்கள் என்பதை உணர்த்த வேண்டும் எனக் கட்சித் தலைமை முனைப்புக் காட்டிவருகிறது. 

அதனால், நெல்லையில் நடக்க இருக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியினர் பங்கேற்பது தொடர்பாகவும் அதிக எண்ணிக்கையில் கட்சியினரை அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கவும் நெல்லை மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளர்கள் அவசரமாக ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். நெல்லையில் நடக்க இருக்கும் கருணாநிதியின் நினைவு அஞ்சலி பொதுக்கூட்டத்தில் பெருமளவில் கூட்டத்தைத் திரட்டிக் காட்ட வேண்டும் என்கிற முனைப்புடன் இப்போதே கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.