`ஆகஸ்ட் 20-ல் செயற்குழுக் கூட்டம்!’ - அ.தி.மு.க தலைமை அறிவிப்பு

ஆகஸ்ட் 20-ம் தேதி அ.தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெறும் என ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 20-ம் தேதி மாலை 4 மணி அளவில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  இணைந்து இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் எம்.பி, கே.சி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, கே.சி.பழனிசாமி புகாரில் உள்ள விவகாரங்களை 4 வார காலத்துக்குள் முடித்து வைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க செயற்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலுக்கு டி.டி.வி.தினகரன் தரப்பு தயாராகிவிட்ட நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையிலும், அ.தி.மு.க தொண்டர்களை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையிலும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் கடந்து விட்டநிலையில், அரசின் சாதனைகளை விழாவாகக் கொண்டாடுவது குறித்தும், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அதற்கான ஆயத்தப் பணிகள் உள்ளிட்டவை குறித்தும் இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 250 பேர் கலந்துகொள்ள உள்ளனர். தி.மு.க செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!