வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (13/08/2018)

கடைசி தொடர்பு:21:40 (13/08/2018)

`ஸ்டெர்லைட் ஆலையின் அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டன!’ - ஆட்சியர் சந்தீப் நந்துாரி தகவல்

``ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளுக்கு அனுமதி இல்லை என பசுமைத் தீர்ப்பாயம் கூறியதை அடுத்து, ஆலையின் 3 வாசல் கதவுகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன”  என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 100 நாள்களாக கிராமங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை ஒடுக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, மே மாதம் 28-ம் தேதி ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டு, சீல் வைத்து மூடப்பட்டது.   

இந்நிலையில், கடந்த ஜூன் 16-ம் தேதி ஆலையிலிருந்து அமிலம் கசிவு ஏற்படுவதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டனர். இதில், கந்தக அமில சேமிப்புக் கலனில் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, ஆலைக்குள் இருப்பு வைக்கப்பட்டுள்ள பாஸ்பாரிக் அமிலம், ராக் பாஸ்பேட், ஜிப்சம், ராக் பாஸ்பேட், காப்பர் தாது ஆகியவையும் கடந்த 30 நாள்களாக வெளியேற்றப்பட்டு வந்தது. இதில், ஜிப்சம், ராக் பாஸ்பேட் ஆகியவை அதிகளவில் இருப்பு உள்ளதால் இவற்றை வெளியேற்றும் பணி கூடுதலாக சில நாள்கள் நடைபெற்றது.

இந்நிலையில், ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி கடந்த மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மனுத் தாக்கல் செய்தது. கடந்த சில நாள்களுக்கு முன், ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பில், ஆலையில்  வேறு எந்தப் பராமரிப்புப் பணிகளுக்கும் அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, ஆலையில் நடைபெற்று வந்த மூலப்பொருள்கள் வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டு, ஆலையின் கதவுகள் சீல் வைக்கப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவின்படி ஆலையில் இருந்து மூலப் பொருள்கள் வெளியேற்றும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், ஆலையின் மூன்று கதவுகளும் மூடப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஆலை தரப்பில் இதுவரையிலும் எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை. அப்படி கோரிக்கை  வைக்கும்போது, முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க