கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி - 6 நாள்களாக அரைக்கம்பத்தில் பறக்கும் அ.தி.மு.க கொடி!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 நாள்களாக அ.தி.மு.க கட்சிக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

அதிமுக கட்சிக் கொடி

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவை அடுத்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க கொடிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து தி.மு.க தொண்டர்கள் அவரது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகத் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடமதுரை கிராமத்தில் ஆளும் கட்சியின், அதாவது அ.இ.அ.தி.மு.க கட்சிக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டுள்ளனர் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரிடம் கேட்டதற்கு, ``கருணாநிதி மூத்த தலைவர் என்று இந்தக் கொடியையும் இறக்கிவிட்டார்கள்" என்றார். கருணாநிதி மறைந்து நாளையுடன் ஒருவாரம் ஆகவுள்ள நிலையில் இன்று வரை அந்தக் கொடியை அ.தி.மு.க-வினர் மேலே பறக்கவிடாமல் அரைக் கம்பத்திலேயே பறக்கவிட்டுள்ளனர். இதே போல அந்தப் பகுதி தி.மு.க-வினர் கருணாநிதியின் படத்துக்குத் தினந்தோறும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!